கர்நாடகாவில் கடன் கொடுக்கல், வாங்கல் தகராறில் குடும்பத்துடன் 3 பேர் தற்கொலை


கர்நாடகாவில் கடன் கொடுக்கல், வாங்கல் தகராறில் குடும்பத்துடன் 3 பேர் தற்கொலை
x

கர்நாடகாவில் கடன் கொடுக்கல், வாங்கல் தகராறில் குடும்பத்துடன் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.



பெங்களூரு,


கர்நாடகாவின் பெங்களூரு நகரில் ஓசூர்-சர்ஜாபூர் சாலையில் அமைந்த வீடு ஒன்றில் தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் என 3 பேர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் பெங்களூரு நகர காவல் துறைக்கு தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று 3 பேரின் உடல்களை புனித ஜான்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் தொழிலதிபர் சந்தோஷ், அவரது மனைவி ஓமனா (வயது 55) மற்றும் இவர்களது மகள் அனுஷா (வயது 18) ஆகியோர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

சந்தோஷ் தன் மீது முதலில் மண்ணெண்ணெய் ஊற்றி விட்டு பின்னர் குடும்பத்தினர் மீதும் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து உள்ளார். இதில் அவர்கள் 3 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில், கேரளாவின் பாலக்காட்டில் இருந்து 1998-ம் ஆண்டு புலம்பெயர்ந்து சென்றுள்ளது தெரிய வந்துள்ளது என பெங்களூரு நகர காவல் துறையின் தெற்கு-கிழக்கு மண்டல துணை காவல் ஆணையாளர் சி.கே. பாபா கூறியுள்ளார்.

அவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான தீவிர காரணம் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. சந்தோஷ் சிலருக்கு கடன் கொடுத்து உள்ளார். சிலரிடம் இருந்து கடன் வாங்கியும் உள்ளார்.

கொடுத்த கடனை திருப்பி வாங்க முடியாமல் மற்றும் கடனை திருப்பி அடைக்க முடியாததற்காக வருத்தத்தில் இருந்துள்ளார். அதனால், அவர் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என பாபா கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story