மதனப்பள்ளி மார்க்கெட்டில் தக்காளி விலை வரலாறு காணாத உயர்வு : கிலோ ரூ.160-க்கு விற்பனை
மதனப்பள்ளி மார்க்கெட்டில் தக்காளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. `
ஸ்ரீகாளஹஸ்தி,
ஆந்திராவில் தக்காளி விற்பனையில் பிரபலமான ஊராக ராயச்சோட்டி அன்னமயா மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி திகழ்கிறது. மதனப்பள்ளி தக்காளி மார்க்கெட் நாட்டிலுள்ள தக்காளி மார்க்கெட்டுகளில் மிகப் ெபரிய மார்க்கெட்டாகும்.
மதனப்பள்ளியில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு தக்காளி வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது மார்க்கெட்டில் தக்காளியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. தக்காளி விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஞாயிற்றுக்கிழமையான ேநற்று மதனப்பள்ளி மார்க்கெட்டுக்கு 253 டன் எடையிலான தக்காளி மட்டுமே வந்தது. அதில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.160-ல் இருந்து ரூ.196 வரையிலும், 2-வது ரகம் ரூ.120-ல் இருந்து ரூ.156 வரையிலும் விற்பனையானது. 25 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி தக்காளி ரூ.4 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.4 ஆயிரத்து 900 வரை ஏலம் விடப்பட்டது.
வெளிமாநிலங்களில் தக்காளி விளைச்சல் இல்லாததாலும், மதனப்பள்ளி சுற்று வட்டாரப் பகுதிகளில் தக்காளி சீசன் தாமதமானதாலும் விலை வரலாறு காணாத வகையில் உச்சத்தை தொட்டுள்ளது. தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.