மங்களூருவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; 2 பேர் கைது
மங்களூருவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகரில் நேற்று முன்தினம் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட போலீஸ் கமிஷனர் குல்தீப் குமார் ஜெயின் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடக்கும் குற்றச்செயல்கள் குறித்து போலீஸ் கமிஷனரிடம் எடுத்து கூறினர்.
இந்தநிலையில் அட்டாவரை சேர்ந்த அகமது ரபீக் என்பவர், தங்கள் பகுதியில் வாலிபர்கள் 2 பேர் குடிபோதையில் வந்து, பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறினர். இதை கேட்ட போலீஸ் கமிஷனர் உடனே போலீசாருக்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அட்டாவருக்கு சென்ற போலீசார், பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த வாலிபர்கள் அதே பகுதியை சேர்ந்த அமீர், சிராஜ் என்று தெரியவந்தது. இவர்கள் 2 பேர் மீதும் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.