தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சியிடம் ரூ.1,250 கோடி நிதி குவிந்தது


தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சியிடம் ரூ.1,250 கோடி நிதி குவிந்தது
x

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சியான பாரத ராஷ்டிர சமிதி கட்சியிடம் ரூ.1,250 கோடி நிதி குவிந்துள்ளது. வங்கி வட்டியாக மட்டும் மாதம் ரூ.7 கோடி கிடைக்கிறது.

ரூ.1,250 கோடி குவிந்தது

தெலுங்கானா மாநிலத்தில் முதல்-மந்திரி சந்திரசேகரராவின் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இந்தக் கட்சியின் நிறுவன நாள் விழா, ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் கட்சித்தலைவரும், முதல்-மந்திரியுமான சந்திரசேகரராவ் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நமது கட்சியிடம் ரூ.1,250 கோடி நிதி சேர்ந்துள்ளது. இதில் ரூ.767 கோடி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. கட்சியை நடத்துவதற்கும், மாவட்டங்களில் கட்சி அலுவலகங்கள் கட்டுவதற்கும், பிரசாரம் செய்வதற்கும், உள்கட்டமைப்பு வசதிகளை செய்வதற்கும் கட்சி நிதி செலவிடப்பட்டுள்ளது.வங்கியில் டெபாசிட் செய்துள்ள பணத்துக்காக மாதம் ரூ.7 கோடி வட்டி கிடைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லியில் கட்சி அலுவலகம்

இந்த விழாவில், கட்சியின் நிதி நிர்வாகம் பற்றியும், நிதி விவகாரத்தை கட்சித்தலைவர் கவனிப்பது குறித்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாட்டின் தலைநகரான டெல்லியில், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் அலுவலகம் அடுத்த மாதம் 4-ந் தேதி திறக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சினிமா, டி.வி. சேனல்

பாரத ராஷ்டிர சமிதி கட்சியை நாட்டு மக்களிடம் பெருமளவில் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்காக டி.வி. சேனல்களில் விளம்பரங்கள் செய்யவும், திரைப்படம் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கட்சி சார்பில் ஒரு டி.வி. சேனல் தொடங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சித்தொண்டர்களும், மக்கள் பிரதிநிதிகளும் எல்லா வகையிலும் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும், எந்தச் சூழ்நிலையிலும் ஊழல் செய்யக்கூடாது என்றும் சந்திரசேகரராவ், கேட்டுக்கொண்டார்.


Next Story