விராஜ்பேட்டையில் காபி தோட்டத்தில் புகுந்து 30 காட்டு யானைகள் அட்டகாசம்


விராஜ்பேட்டையில்  காபி தோட்டத்தில் புகுந்து 30 காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 9 Sep 2023 6:45 PM GMT (Updated: 9 Sep 2023 6:45 PM GMT)

விராஜ்பேட்டையில் காபி தோட்டத்தில் புகுந்து 30 காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

குடகு-

விராஜ்பேட்டையில் காபி தோட்டத்தில் புகுந்து 30 காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

காட்டு யானைகள் அட்டகாசம்

குடகு மாவட்டம் விராஜ்பேட்டையில் பல்வேறு கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளன. இதனால் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் நிரந்தரமாக காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில், மால்தாரே, மயிலாப்பூர், கரிகோடு, படகா பங்கல், குந்தி, மட்டம், பஜகொல்லி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் அட்டகாசம் அதிகமாக இருந்து வருகிறது.

அந்த யானைகள், விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி செல்வதுடன் மக்களையும் தாக்கி வருகிறது. இதனால் பீதியடைந்துள்ள மக்கள் காட்டு யானைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

30 யானைகள்

இந்த நிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வெளியேறி மால்தாரே, பஜகொல்லி, கரிகோடு கிராமங்களில் உள்ள காபி தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்தன. மேலும், அவை அந்தப்பகுதியில் முகாமிட்டு உள்ளன. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் வனத்துறையினர் அந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் அந்த யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் ஒவ்வொரு கிராமமாக சென்று வருகிறது.

கிராம மக்கள் கோரிக்கை

இதனால் பீதியடைந்துள்ள மக்கள், அந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story