அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா; உண்மையும், நீதியும் வென்றுள்ளது - ஜே.பி.நட்டா
பல நூற்றாண்டு சோதனைகளுக்குப் பிறகு கடவுள் ராமர் அவரது இடத்திற்கு திரும்புகிறார் என ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
புதுடெல்லி,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா வரும் 22-ந்தேதி(நாளை) நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;
"ஜனவரி 22-ந்தேதி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு தருணத்தை நாம் காணவிருக்கிறோம். பல நூற்றாண்டு சோதனைகள் மற்றும் போராட்டங்களுக்குப் பிறகு கடவுள் ராமர் அவரது இடத்திற்கு திரும்புகிறார். உண்மையும், நீதியும் வென்றுள்ளது.
இந்த வரலாற்று நிகழ்வைக் கொண்டாட குடும்பங்கள் ஒன்று கூடுகின்றன. நாடு முழுவதும் உள்ள கோவில்களில் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு, ஒரு கொண்டாட்ட சூழலை உருவாக்குகிறது.
நீங்கள் உலகில் எங்கிருந்தாலும் இந்த முக்கியமான கொண்டாட்டத்தில் பங்குபெறுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய சமூகம், விலைமதிப்பற்ற பங்களிப்புகளைச் செய்துள்ளது. உலகம் முழுவதும் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் சுடரை தாங்கி நிற்கிறது.
உலகம் முழுவதும் பாரதத்தின் நிலையை உயர்த்துவதில் நீங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளீர்கள். உங்களது சாதனைகள் எங்களை பெருமைப்படுத்தியது மட்டுமன்றி, தாயகத்தில் உள்ள இளைய தலைமுறையினரையும் ஊக்கப்படுத்தியுள்ளது.
கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பன்முகத்தன்மையை கொண்ட இந்தியா, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அடைந்துள்ளது. அவர் நாட்டை வளர்ந்த மற்றும் வளமான தேசமாக மாற்றியுள்ளார்."
இவ்வாறு ஜே.பி.நட்டா தெரிவித்தார்.