மோசமான வானிலை - இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் ஏவும் தேதியில் மாற்றம்..!
மோசமான வானிலை காரணமாக இம்மாதம் 18-ந் தேதி ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்.
ஸ்ரீஹரிகோட்டா,
இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் 'விக்ரம்-எஸ்', இம்மாதம் 12-ந் தேதியில் இருந்து 16-ந் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனம், இந்த ராக்கெட்டை தயாரித்துள்ளது.
இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக ராக்கெட் ஏவுதலை இம்மாதம் 18-ந் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம்.
இம்மாதம் 15-ந் தேதியில் இருந்து 19-ந் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படுவதற்கான கால அவகாசம் உள்ளது. 18-ந் தேதி காலை 11.30 மணியளவில் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்று ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 'இஸ்ரோ' ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்படுகிறது. வணிக நோக்கத்தில், ராக்கெட் மூலம் செயற்கைகோள்களை செலுத்த திட்டமிட்டுள்ளது. 'விக்ரம்-எஸ்' ராக்கெட்டில் வாடிக்கையாளர்களின் 3 சுமைகள் ஏற்றி அனுப்பப்படுகின்றன.
வானிலையை பொறுத்து, ராக்கெட் ஏவப்படும் சரியான தேதியை அதிகாரிகள் தீர்மானிப்பார்கள் என்று ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் கூறியுள்ளது. இதன்மூலம், விண்வெளிக்கு ராக்கெட் ஏவிய முதலாவது தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் பெறுகிறது.