கேரள மாநிலத்தில் கனமழை நிகழ்வுகள் அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்
கேரளாவில் கனமழை நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் இணை மந்திரி ஜிதேந்திர சிங், கடந்த 2001 முதல் 2021 வரையிலான காலகட்டத்திற்கான தரவின்படி தென்மேற்கு பருவமழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) கேரளாவில் கனமழை பெய்வது அதிகரித்திருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், கேரளாவில் தானியங்கி வானிலை நிலையங்களின் இணைப்பை அதிகரிக்க இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர், பி.ஐ.எஸ்-1994 தரநிலைகளின் படி கேரளாவில் 115 வானிலை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், முதற்கட்டமாக 100 தானியங்கி வானிலை நிலையங்களை அமைக்க இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் முடிவு செய்ததாகவும் அவர் கூறினார்.
இதன்படி புவி அறிவியல் அமைச்சகம் அண்மையில் 77 நிலையங்களை அமைத்ததுடன், மேலும் 23 நிலையங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர கேரளாவில் கூடுதலாக 15 தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் மொத்தம் 92 நிலையங்கள் அங்கு உள்ளன என்று தெரிவித்துள்ளார்