பாலியல் வன்கொடுமைக்கு பின் படுகொலை செய்வது அதிகரிப்பு; நான் உண்மையையே கூறினேன்: அசோக் கெலாட்


பாலியல் வன்கொடுமைக்கு பின் படுகொலை செய்வது அதிகரிப்பு; நான் உண்மையையே கூறினேன்:  அசோக் கெலாட்
x

பாலியல் வன்கொடுமைக்கு பின் அடையாளம் காணப்படும் அச்சத்தில் குற்றவாளி கொலை செய்து விடுவது அதிகரித்து உள்ளது என நான் உண்மையையே கூறினேன் என்று அசோக் கெலாட் கூறியுள்ளார்.



ஜெய்ப்பூர்,



டெல்லியில் மத்திய அரசுக்கு எதிரான காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் கலந்து கொண்டு பேசும்போது, நிர்பயா வழக்கிற்கு பின்னர், குற்றவாளிகளை தூக்கில் இடுங்கள் என்ற கோரிக்கை வலு பெற்றது.

இதனை தொடர்ந்து அந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதில் இருந்து, நாட்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் அதன்பின் படுகொலை செய்யப்படுவதும் அதிகரித்து உள்ளது. நாட்டில் இதுபோன்ற ஆபத்தான போக்கு தற்போது காணப்படுகிறது என கூறி சர்ச்சை ஏற்படுத்தினார்.

அவர் தொடர்ந்து கூறும்போது, பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணும் சம்பவத்திற்கு பின்பு ஒரு சாட்சியாக மாறுவார் என குற்றவாளி உணருகிறார். இதுபோன்ற சூழலில், அந்த பெண்ணை கொலை செய்வது சரி என்ற முடிவுக்கு அவர் வருகிறார்.

நாடு முழுவதிலும் இருந்து வரும் தகவல்கள் ஆபத்தான ஒரு போக்கையே எடுத்து காட்டுகிறது. நாட்டில் இந்த சூழ்நிலை நல்லதுக்கு இல்லை என கெலாட் கூறி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த வருடம், கர்நாடகாவின் மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் சட்டசபை சபாநாயகர் கே.ஆர். ரமேஷ் குமார் கூறும்போது, பாலியல் வன்கொடுமையை தவிர்க்க முடியாதபோது, படுத்து கொண்டு அதனை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள் என்றொரு பழமொழி உண்டு என்று அவர் கூறியது நாடு முழுவதும் சர்ச்சை ஏற்படுத்தியது.

டெல்லியில் 2012ம் ஆண்டு டிசம்பர் 16-ல் ஓடும் பேருந்தில் மைனர் சிறுவர் உள்பட 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு பேருந்தில் இருந்து வெளியே வீசப்பட்டார். சிங்கப்பூரில் சிகிச்சை அளிக்கப்பட்டும் சில நாட்களில் அவர் உயிரிழந்து விட்டார்.

நிர்பயா வழக்கு என அறியப்படும் இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் 4 பேருக்கு நீண்டகால சட்ட போராட்டத்திற்கு பின்பு 2020ம் ஆண்டு மார்ச் 20-ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதேபோன்று சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறும்போது, பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது சரியல்ல. சிறுவர்கள் தவறு செய்கிறார்கள்... நாங்கள் ஆட்சிக்கு வந்தபின்னர் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அசோக் கெலாட் கூறும்போது, இந்த விவகாரத்தில் நான் உண்மையையே கூறினேன். ஒரு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்யும் நபர், அடையாளம் காணப்படும் அச்சத்தில் அதனை கொன்று விடுகிறார். அதன்பின்னரே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கு முன்பு இவ்வளவு மரணங்கள் நடந்ததில்லை என்று அவர் கூறியுள்ளார்.


Next Story