கருட சேவையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு


கருட சேவையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று இரவு 7 மணிக்கு கருட சேவை நடக்கிறது.

திருப்பதி,

திருப்பதி பிரமோற்சவ விழாவில் நேற்று இரவு சர்வபூபால வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் கோவில் நிர்வாகம், ஆண்டாள் தேவிக்கு சூட்டிய மலர் மாலைகள், இலைகளால் செய்யப்பட்ட பச்சைக்கிளி, மலர் ஜடை ஆகியவற்றை திருப்பதி மலைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு பெரிய ஜீயர் மடத்தில், ஜீயர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து, மலர் மாலைகள், பச்சைக்கிளி, மலர் ஜடை ஆகியவற்றை ஏழுமலையான் கோவில் மாடவீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். பின்னர் தேவஸ்தான அர்ச்சகர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் ஆண்டாள் மாலையை ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தனர்.

பிரமோற்சவத்தின் 5-வது நாளான இன்று காலை மோகினி அவதாரத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்கு கருட சேவை நடக்கிறது. தங்க கருடவாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளுகிறார். இதில் சுமார் 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருட சேவையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவில் முகப்பு முதல், பஸ் நிறுத்தம் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அதிகமாக கூடிய இடங்களில் நெரிசல் ஏற்பட்டது. பக்தர்களுக்கு தேவையான நீர், உணவு, பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது. மேலும், கருட சேவையை முன்னிட்டு திருமலைக்கு பக்தர்கள் பைக்குகளில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலில் சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரமாகிறது.


Next Story