கா்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு


கா்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 10 Oct 2023 12:15 AM IST (Updated: 10 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 7,973 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மைசூரு:

காவிரி ேமலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் கர்நாடக அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து கர்நாடக விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனாலும் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. 124.80 அடி உயரம் ெகாண்ட இந்த அணையில் நேற்றைய நிலவரப்படி 100.92 அடி தண்ணீர் இருந்தது. தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் 97 அடிக்கு ெசன்ற அணையின் நீர்மட்டம், கடந்த சில தினங்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால், மீண்டும் 100 அடியை தாண்டியது.

இந்த அணையில் இருந்து கடந்த சில தினங்களாக காவிரியில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடிக்கு கீழ் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 3,719 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று அது வினாடிக்கு 5,973 கனஅடி ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,503 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதேபோல், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணையில் இருந்தும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று வினாடிக்கு 2,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்றைய நிலவரப்படி 2,276.52 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,261 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரியில் வினடிக்கு 7,973 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 4,719 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story