நாட்டின் வளர்ச்சிக்கு விளையாட்டு வசதிகளை அதிகரிப்பது அவசியம் - பிரதமர் மோடி


நாட்டின் வளர்ச்சிக்கு விளையாட்டு வசதிகளை அதிகரிப்பது அவசியம் - பிரதமர் மோடி
x

வாரணாசியில் புதிய சர்வதேச கிரிக்கெட் அரங்கம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சிக்கு விளையாட்டு வசதிகளை அதிகரிப்பது அவசியம் என்று பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியான, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் புதிய சர்வதேச கிரிக்கெட் அரங்கம் கட்டப்படுகிறது. ரூ.451 கோடி செலவில் கட்டப்படும் இந்த கிரிக்கெட் அரங்கத்துக்கு நேற்று நடைபெற்ற விழாவில் மோடி அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

மகத்தான அடையாளம்

'நாட்டின் வளர்ச்சிக்கு விளையாட்டு வசதிகளை அதிகரிப்பது அவசியம். நாட்டின் மரியாதை குறித்த விஷயத்திலும் அது மிகவும் முக்கியம். முக்கிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்காகவே உலகில் பல நகரங்கள் பெயர் பெற்றுள்ளன. அதுபோன்ற பன்னாட்டு விளையாட்டு மையங்களை நம் நாட்டிலும் நாம் உருவாக்க வேண்டும். இந்த கிரிக்கெட் அரங்கம், வெறுமனே செங்கல், கான்கிரீட்டால் உருவாக்கப்பட்டதாக அல்லாமல், இந்தியாவின் எதிர்காலத்தின் மகத்தான அடையாளமாக திகழும்.

நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

நாட்டில் விளையாட்டு குறித்த மனோபாவம் மாறியுள்ளது. விளையாட்டை உடல்தகுதி, வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர்களின் பணிவாழ்வுக்கு தொடர்புடையதாக அரசு மாற்றியுள்ளது. அதனாலேயே விளையாட்டுத்துறையில் இந்தியா வெற்றிகளை குவித்துவருகிறது.

9 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது, விளையாட்டுத்துறைக்கான மத்திய பட்ஜெட் ஒதுக்கீடு 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கேலோ இந்தியா விளையாட்டுக்கும் கடந்த ஆண்டைவிட 70 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து

நம் நாட்டின் மூலை முடுக்குகள், சிறு கிராமங்களில் விளையாட்டுத் திறமைக்கு பஞ்சமில்லை. அங்குள்ள வீரர், வீராங்கனைகளை கண்டறிந்து நாம் பட்டை தீட்ட வேண்டும். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் நமது வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.'

இவ்வாறு அவர் பேசினார்.

கிரிக்கெட் அணியின் உடை

பிரதமர் மோடிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் நினைவுப்பரிசை வழங்கினர். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், இந்திய கிரிக்கெட் அணியின் உடையை மோடியிடம் வழங்கினார்.

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கிரிக்கெட் பிரபலங்கள் சுனில் கவாஸ்கர், கபில்தேவ், ரவி சாஸ்திரி, இந்திய கிரிக்கெட் வாரிய துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா உள்ளிட்டோர் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றனர்.

மோடிக்கு பெண்கள் மலர்தூவி வரவேற்பு

கிரிக்கெட் அரங்குக்கு அடிக்கல் நாட்டியபிறகு, வாரணாசியில் நடந்த பாராட்டுவிழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதற்காக பெண்கள் சார்பில் மோடிக்கு இந்த பாராட்டு விழா கூட்டம் நடத்தப்பட்டது. விழாவுக்கு வந்த மோடியை பெண்கள் மலர்தூவி வரவேற்றனர்.

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 'நாரி சக்தி வந்தன் அதினியம்' என்ற மகளிர் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியதற்கு நம் நாட்டு பெண்கள்தான் காரணம். நம் நாட்டு பெண்களின் தலைமை தாங்கும் சக்தி, வரலாற்று காலத்திலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது' என்றார்.

இந்த கூட்டத்தில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் பங்கேற்றார்.


Next Story