'இந்தியா' கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம்: தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை..!!


இந்தியா கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம்: தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை..!!
x

டெல்லியில் சரத்பவார் இல்லத்தில் நடந்த ‘இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், போபாலில் முதலாவது பொதுக்கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்தும் நோக்கத்துடன் காங்கிரஸ், தி.மு.க. உள்பட 28 எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன.

'இந்தியா' என்று பெயரிடப்பட்ட இக்கூட்டணியின் ஆலோசனை கூட்டங்கள், பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் நடந்துள்ளன. பல்வேறு பிரச்சினைகளை ஆராய 14 உறுப்பினர்களை கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.

சரத்பவார் இல்லம்

இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதலாவது கூட்டம் நேற்று நடந்தது. டெல்லியில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இல்லத்தில் இக்கூட்டம் நடந்தது.

14 உறுப்பினர்களில் 12 பேர் மட்டும் கலந்து கொண்டனர். சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ்), கே.சி.வேணுகோபால் (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா), ஜாவீத் அலிகான் (சமாஜ்வாடி), தேஜஸ்வி யாதவ் (ராஷ்டிரீய ஜனதாதளம்), உமர் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி), மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயக கட்சி), ராகவ் சதா (ஆம் ஆத்மி), சஞ்சய் ஜா (ஐக்கிய ஜனதாதளம்), சஞ்சய் ராவத் (உத்தவ் சிவசேனா) ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமலாக்கத்துறை சம்மன்

ஒருங்கிணைப்பு குழு உறுப்பினரான அபிஷேக் பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்) பங்கேற்கவில்லை. நேற்று விசாரணைக்கு ஆஜராக அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அவர் விசாரணைக்கு சென்றதால் இக்கூட்டத்துக்கு வரவில்லை.

ஒருங்கிணைப்பு குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிரதிநிதி இன்னும் நியமிக்கப்படவில்லை. அதனால் அக்கட்சியும் பங்கேற்கவில்லை.

சனாதன தர்ம சர்ச்சை தொடர்பாக இந்தியா கூட்டணி மீது பா.ஜனதா தாக்குதல் தொடுத்து வரும் நிலையில், ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.

பொது வேட்பாளர்

கூட்டத்தில், மாநிலவாரியாக கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை நிறுத்த ஆலோசனை நடத்தப்பட்டது.

மராட்டியம், தமிழ்நாடு, பீகார் ஆகிய மாநிலங்களில் பொது வேட்பாளர் தேர்வில் பிரச்சினை இருக்காது என்று இந்தியா கூட்டணி கருதுகிறது. ஆனால், டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்காளம், கேரளா போன்ற மாநிலங்களில் பொது வேட்பாளர் தேர்வில் சிக்கல் எழும் என்று நினைக்கிறது.

இதுதவிர, கூட்டணியின் பிரசார உத்தி பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. எந்தெந்த நகரங்களில் பொதுக்கூட்டம் நடத்துவது என்றும் பேசப்பட்டது.

தொகுதி பங்கீடு

ஒருங்கிணைப்பு குழு கூட்டம் முடிவடைந்த பிறகு, காங்கிரசை சேர்ந்த கே.சி.வேணுகோபால், ஒரு கூட்டு அறிக்கையை நிருபர்கள் முன்னிலையில் வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தொகுதிகளை தீர்மானிக்கும் பணியை தொடங்குவது என்று ஒருங்கிணைப்பு குழு முடிவு செய்துள்ளது. கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும்.

பொதுக்கூட்டம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூட்டாக பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில், மத்தியபிரதேச மாநில தலைநகர் போபாலில் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பொதுக்கூட்டம் நடத்தப்படும்.

அதில், விலைவாசி உயர்வு, வேலையின்மை, பா.ஜனதா அரசின் ஊழல் ஆகிய பிரச்சினைகள் எழுப்பப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை எழுப்ப கூட்டத்தில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

போபால், பாட்னா, நாக்பூர், கவுகாத்தி, டெல்லி உள்ளிட்ட 6 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டதாக மற்றொரு ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் தெரிவித்தார். ஒருங்கிணைப்பு குழுவின் 2-வது கூட்டம், நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் முடிந்த பிறகு டெல்லியில் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.


Next Story