2022-23-ம் நிதியாண்டில் ரூ.15,920 கோடி ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி - ராஜ்நாத் சிங்


2022-23-ம் நிதியாண்டில் ரூ.15,920 கோடி ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி - ராஜ்நாத் சிங்
x

இந்தியா 2022-23-ம் நிதியாண்டில் ரூ.15,920 கோடி மதிப்பில் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

உலக அளவில் ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது. மேலும் உள்நாட்டிலும் இந்திய முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதேநேரம் இந்தியா வெளிநாடுகளுக்கும் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2022-23-ம் நிதியாண்டில் ரூ.15,920 கோடி அளவுக்கு ஏற்றுமதி நடந்துள்ளதாக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

குறிப்பிடத்தக்க சாதனை

இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத வகையில், 2022-23-ம் நிதியாண்டில் ரூ.15,920 கோடி அளவுக்கு நடந்துள்ளது. இது நாட்டிற்கு குறிப்பிடத்தக்க சாதனையாகும்' என பெருமிதத்துடன் குறிப்பிட்டு உள்ளார். மேலும், பிரதமர் மோடியின் உத்வேகமூட்டும் தலைமையின் கீழ், நமது ராணுவ தளவாட ஏற்றுமதி தொடர்ந்து அதிவேகமாக வளரும் என நம்பிக்கையும் தெரிவித்து இருந்தார்.

ரூ.1.75 லட்சம் கோடி

இந்தியா கடந்த 2021-22-ம் நிதியாண்டில் ரூ.12,814 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்திருந்தது. முந்தைய 2020-21-ம் ஆண்டில் ரூ.8,434 கோடி, 2019-20-ம் நிதியாண்டில் ரூ.9,115 கோடி அளவுக்கும் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி நடந்துள்ளது.

வருகிற 2024-25-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி ரூ.1.75 லட்சம் கோடி அளவுக்கும், வெளிநாட்டு ஏற்றுமதி ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கும் எட்டுவதை இலக்காக அரசு நிர்ணயித்து உள்ளது.

இதற்காக கடந்த சில ஆண்டுகளாக தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


Next Story