ரூ.1,000 கோடி செலவழித்து புதிய உளவு மென்பொருள் மூலம் ஒட்டு கேட்க மத்திய அரசு திட்டம் - காங்கிரஸ் குற்றச்சாட்டு


ரூ.1,000 கோடி செலவழித்து புதிய உளவு மென்பொருள் மூலம் ஒட்டு கேட்க மத்திய அரசு திட்டம் - காங்கிரஸ் குற்றச்சாட்டு
x

கோப்புப்படம்

புதிய உளவு மென்பொருளை விலைக்கு வாங்கி, செல்போன்களை ஒட்டு கேட்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக ஒரு ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

சர்ச்சைக்குரிய 'பெகாசஸ்' உளவு மென்பொருளை விட பிரபலம் குறைந்த புதிய உளவு மென்பொருளை விலைக்கு வாங்கி, செல்போன்களை ஒட்டு கேட்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக ஒரு ஆங்கில பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. இதற்காக சுமார் ரூ.1,000 கோடி ஒப்பந்தத்தை அளிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், அந்த போட்டியில் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இச்செய்தியை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சி, மத்திய அரசை விமர்சித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:- கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, பொதுமக்களையும், எதிர்க்கட்சிகள், நீதித்துறை, தேர்தல் கமிஷனர், பத்திரிகையாளர்கள் ஆகியோரையும் 'பெகாசஸ்' உளவு மென்பொருள் மூலம் மோடி அரசு உளவு பார்த்தது.

தற்போது, வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, வெளிநாட்டு உதவியுடன், நம் மக்களின் செல்போன்களை உளவு பார்க்க மீண்டும் சதித்திட்டம் தீட்டி இருப்பது அம்பலமாகி உள்ளது. இது, ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story