கோதுமையை இருப்பு வைக்க கட்டுப்பாடு: விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை


கோதுமையை இருப்பு வைக்க கட்டுப்பாடு: விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை
x

கோப்புப்படம்

கோதுமையை இருப்பு வைக்க விவசாயிகள், வியாபாரிகளுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்து உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் அத்தியாவசிய உணவுப்பொருட்களில் ஒன்றாக கோதுமை உள்ளது. ஆனால் கோதுமையின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

எனவே இதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. இதை மத்திய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

உடனடியாக அமல்

கோதுமை விலையில் கடந்த மாதத்தில் சற்று ஏற்றம் காணப்பட்டது. குடோன் மட்டத்திலேயே சுமார் 8 சதவீத விலை உயர்வு உள்ளது.

அதேநேரம் மொத்தம் மற்றும் சில்லறை விலை அந்த அளவுக்கு அதிகரிக்கவில்லை என்றாலும், கோதுமையை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடு விதித்து உள்ளது.

அதன்படி அடுத்த ஆண்டு (2024) மார்ச் 31-ந்தேதி வரை வணிகர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை வர்த்தகர்கள் உள்ளிட்டோர் கோதுமையை இருப்பு வைக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. 15 ஆண்டுகளில் முதல் முறையாக எடுக்கப்பட்டு உள்ள இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

போதுமான கையிருப்பு

கோதுமைக்கான இறக்குமதி வரியை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை. ஏனெனில் நாட்டில் போதுமான அளவுக்கு கோதுமை வினியோகம் உள்ளது. கோதுமை ஏற்றுமதிக்கான தடை கூட தொடர்கிறது.

நாட்டில் போதுமான அளவு கோதுமை கையிருப்பு உள்ளது. விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கையிருப்பு வைத்திருப்பதோடு, பதுக்கல்காரர்களும் இருப்பு வைத்திருக்கின்றனர். இவ்வாறு நாட்டில் போதுமான அளவு கோதுமை இருப்பு உள்ளதால் இறக்குமதியை நாங்கள் ஆதரிக்கவில்லை.

15 லட்சம் டன் விடுவிப்பு

மேலும் கோதுமை வினியோகம் தாராளமாக இருப்பதை உறுதி செய்வதற்காக வெளிச்சந்தை விற்பனை திட்டத்தில் மத்திய தொகுப்பில் இருந்து 15 லட்சம் டன் கோதுமையை பெரிய நுகர்வோர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதைப்போல அரிசியும் வெளிச்சந்தை விற்பனை திட்டத்தில் வழங்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்தார்.


Next Story