கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் 573 பேரிடர்களில் 1.3 லட்சம் பேர் பலி - ஐ.நா. அமைப்பு தகவல்


கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் 573 பேரிடர்களில் 1.3 லட்சம் பேர் பலி - ஐ.நா. அமைப்பு தகவல்
x

கோப்புப்படம்

இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட 573 பேரிடர் சம்பவங்களில் 1 லட்சத்து 38 ஆயிரம்பேர் பலியானதாக ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உலக வானிலை மாநாடு நேற்று தொடங்கியது. அதில் தாக்கல் செய்வதற்காக, ஐ.நா. அமைப்பான உலக வானிலை ஆராய்ச்சி துறை ஒரு அறிக்ைக தயாரித்துள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 1970-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டுவரையிலான 51 ஆண்டுகளில், உலக அளவில் 11 ஆயிரத்து 778 பேரிடர் சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றின் மூலம் 20 லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

4 லட்சத்து 30 ஆயிரம் கோடி டாலர் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. 90 சதவீத மரணங்கள், வளரும் நாடுகளில்தான் நடந்துள்ளன.

ஆசியா

மேற்கண்ட காலகட்டத்தில், ஆசிய கண்டத்தில் மட்டும் 3 ஆயிரத்து 612 பேரிடர் சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் 9 லட்சத்து 84 ஆயிரத்து 263 பேர் பலியாகி உள்ளனர். 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆசியாவில் அதிக அளவாக வங்காளதேசத்தில் 5 லட்சத்து 20 ஆயிரத்து 758 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில், 573 பேரிடர் நிகழ்வுகள் நடந்துள்ளன. 1 லட்சத்து 38 ஆயிரத்து 377 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்து 300 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளம் அதிகரிக்கும்

பேரிடர் சம்பவங்களால் ஏழைகள்தான் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் தாக்கிய 'மோகா' புயலால் மியான்மர், வங்காளதேசம் ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டன. மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைகள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக, இனிவரும் ஆண்டுகளில் வெள்ளம், அனல்காற்று ஆகிய வானிலை நிகழ்வுகள் பலமடங்கு அதிகரிக்கும் என்று காந்திநகரில் உள்ள ஐ.ஐ.டி. வெளியிட்ட ஆராய்ச்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story