அடுத்த ஆண்டு டெல்லியில் 'ஜி-20' மாநாடு வெளியுறவு அமைச்சகம் தகவல்


அடுத்த ஆண்டு டெல்லியில் ஜி-20 மாநாடு வெளியுறவு அமைச்சகம் தகவல்
x

இந்தியா தலைமை தாங்கி நடத்தும் ‘ஜி-20’ மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10-ந் தேதிகளில் டெல்லியில் நடைபெறும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

உலகில், பொருளாதாரத்தில் வளர்ந்த மற்றும் வளரும் 20 நாடுகள் இணைந்த ஒரு அமைப்பு 'ஜி-20' என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், கொரிய குடியரசு, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி ஆகிய 19 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் உள்ளன. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த ஜி-20 நாடுகள் 85 சதவீதத்தை கொண்டுள்ளன. சர்வதேச வர்த்தகத்தில் 75 சதவீதத்தையும், உலக மக்கள்தொகையில் 3-ல் 2 பங்கையும் கொண்டுள்ளன. சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை அமைப்பாக திகழும் இந்த அமைப்பு, கடந்த 1999-ம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது.

அப்போதிருந்து ஆண்டுதோறும் ஜி-20 உச்சி மாநாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜி-20 அமைப்புக்கு தலைமை தாங்கும் நாடு, மாநாட்டை நடத்தும். இந்த வகையில் தற்போது தலைவராக உள்ள இந்தோனேஷியா, வருகிற நவம்பர் மாதம் 15 மற்றும் 16-ந் தேதிகளில் மாலியில் மாநாட்டை நடத்துகிறது.

அடுத்த தலைவராக இந்தியா பொறுப்பேற்க இருக்கிறது. வருகிற டிசம்பர் 1-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30-ந் தேதி வரை இந்தியா தலைமை தாங்கும்.

இந்த தலைமைப்பதவி காலத்தில் இந்தியா என்ன பணிகளையெல்லாம் முன்னெடுக்க உள்ளது? என்பது பற்றி இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியா, இந்தோனேஷியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் சேர்ந்து ஒரு முக்கூட்டமைப்பு உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த 3 நாடுகளும் வளரும் பொருளாதாரங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பரில் பொறுப்பேற்றதற்கு பிறகு, நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட ஆயத்த மற்றும் பிற கூட்டங்களை நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்காக தமிழ்நாட்டில் இருந்து ஜம்மு காஷ்மீர் வரை பொருத்தமான இடங்களை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஜி-20 தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10-ந் தேதிகளில் டெல்லியில் நடைபெறும் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. மாநாட்டுக்கு உறுப்பு நாடுகளைத் தவிர சில சர்வதேச அமைப்புகளையும், விருந்தினர் நாடுகளையும் அழைக்கும் வழக்கம் இருப்பதால், டெல்லியில் நடைபெற உள்ள மாநாட்டுக்கு உலக வங்கி, உலக சுகாதார அமைப்பு, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற அமைப்புகளுடன் வங்காளதேசம், எகிப்து, மொரீசியஸ், சிங்கப்பூர், ஸ்பெயின், நெதர்லாந்து போன்ற விருந்தினர் நாடுகளும் அழைக்கப்பட இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.


Next Story