இந்தியா-மேற்கு ஆசியா-ஐரோப்பா வழித்தடம் பொருளாதார வளர்ச்சி, டிஜிட்டல் இணைப்பை வழங்க உதவும்:பிரதமர் மோடி


இந்தியா-மேற்கு ஆசியா-ஐரோப்பா வழித்தடம் பொருளாதார வளர்ச்சி, டிஜிட்டல் இணைப்பை வழங்க உதவும்:பிரதமர் மோடி
x
தினத்தந்தி 11 Sept 2023 1:40 PM IST (Updated: 11 Sept 2023 3:50 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா-மேற்கு ஆசியா-ஐரோப்பா வழித்தடம் ஆனது, பொருளாதார வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் இணைப்பை வழங்க உதவும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் பாரத் மண்டபத்தில் கடந்த 2 நாட்கள் (செப்டம்பர் 9 மற்றும் 10) ஜி-20 உச்சி மாநாடு நடந்தது. இதில் 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், பிற நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடன், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் உள்ளிட்டோர் பேசினர்.

இந்த நிலையில், ராஷ்டிரபதி பவனில் இன்று வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமரான முகமது பின் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் கலந்து கொண்டார். அவர், ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் பிற மந்திரிகளை இன்று சந்தித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு வழங்கப்பட்டது.

இதன்பின் இரு நாட்டு தலைவர்கள், மந்திரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் ஒன்று நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, இந்தியாவின் முக்கிய செயல்திட்டம் சார்ந்த நட்பு நாடுகளில் ஒன்றாக சவுதி அரேபியா உள்ளது.

உலகில், இரண்டு பெரிய மற்றும் விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரம் கொண்ட நாடுகளாக உள்ள நம்முடைய பரஸ்பர ஒத்துழைப்பானது ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவ முக்கியம்.

எங்களுடைய பேச்சுவார்த்தையில், நட்புறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான பல்வேறு திட்ட தொடக்கங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

இன்றைய பேச்சுவார்த்தையானது, நம்முடைய உறவுகளுக்கு புதிய சக்தி மற்றும் வழிகாட்டுதலை வழங்கும். மனிதகுல நலனிற்காக இணைந்து பணியாற்றுவதற்கான உந்துதலை இது வழங்கும் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், இந்தியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே ஒரு வரலாற்று பொருளாதார வழித்தடம் தொடங்குவதற்கான முடிவை நேற்று நாங்கள் மேற்கொண்டோம்.

இந்த வழித்தடம் ஆனது, இரு நாடுகளை இணைப்பது மட்டுமின்றி, இந்தியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே பொருளாதார வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் இணைப்பை வழங்கவும் உதவும் என பேசியுள்ளார்.


Next Story