இந்திய உற்பத்தி துறை அக்டோபரில் நிலையான வளர்ச்சி கண்டுள்ளது: ஆய்வில் தகவல்
இந்தியாவில் உற்பத்தி துறையின் பொருளாதார வளர்ச்சியானது, கடந்த அக்டோபர் மாதத்தில் தொடர்ந்து ஆரோக்கியமுடன் காணப்பட்டது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல நிறுவனங்கள் முடங்கி, பொருளாதார தேக்கநிலையை நாடு சந்தித்தது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக எஸ் அண்டு பி சர்வதேச இந்திய உற்பத்தி, கொள்முதல் மேலாளர் குறியீடு எனப்படும் பி.எம்.ஐ. அளவு கடந்த செப்டம்பரில் இருந்த 55.1 என்ற அளவில் இருந்து அக்டோபரில் 55.3 ஆக உயர்ந்து உள்ளது.
இது நீண்டகால சராசரியான 53.7 என்ற அளவை காட்டிலும் அதிகம். இதனால் நாட்டில், உற்பத்தி துறையில் ஆரோக்கியம் நிறைந்த, நிலையான முன்னேற்றத்தின் அடையாளம் ஆக அது திகழ்ந்து வருகிறது.
இதேபோன்று, அக்டோபரில் நிறுவனங்கள் மீண்டும் கூடுதல் பணியை தக்க வைத்து கொள்ள முடிந்துள்ளது. இதனால், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து காணப்பட்ட பலவீன நிலை மாறி, தொழிற்சாலைகளுக்கான ஆர்டர்கள் அதிகரித்து உள்ளது.
புதிய ஏற்றுமதிக்கான ஆர்டர்களும் குறிப்பிடும் வகையில் அதிகரித்து உள்ளது. விரைவாக இந்த பிரிவில் விரிவாக்கமும் காணப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வின்படி, அக்டோபரில் விற்பனை அதிகரித்து கூடுதல் ஆர்டர்களையும் இந்திய தொழில் நிறுவனங்கள் பெற்றுள்ளன. ஒட்டுமொத்தத்தில் கொள்முதல் செய்வது சீராக அதிகரித்து காணப்படுகிறது.
எனினும் 14 மாதங்களில் மிக மெதுவாகவே இந்த நடைமுறை எட்டப்பட்டு உள்ளது. கடந்த செப்டம்பரில் இருந்து விற்பனை பொருட்களின் விலையை உயர்த்துவதில், உற்பத்தியாளர்கள் சற்று வரைமுறை செய்து கட்டுக்குள் வைத்துள்ளனர். இதனால், விலை நெருக்கடி கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
கடந்த ஜூலையில் இருந்து கொள்முதல் விகிதம் விரைவான வளர்ச்சி கண்டு வருகிறது. இந்திய பொருட்களின் உற்பத்தியாளர்களிடையே 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வர்த்தகம் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
சில நிறுவனங்கள் இதற்கு ஏற்ப கூடுதல் பணியாளர்களையும் வேலைக்கு அமர்த்தி உள்ளது என அந்த ஆய்வு சுட்டி காட்டியுள்ளது. இதனால், 2023-ம் ஆண்டு அக்டோபருக்குள் பொருட்களின் உற்பத்தி அளவானது உயரும் என இந்திய உற்பத்தியாளர்கள் தொடர்ந்து நம்பிக்கையுடன் காணப்படுகின்றனர் என எஸ் அண்டு பி சர்வதேச இந்திய உற்பத்தி, கொள்முதல் மேலாளர் குறியீடு ஆய்வு தெரிவிக்கின்றது.