கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த இந்தியர்கள் மீட்பு - இந்திய கடற்படை அதிரடி


கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த இந்தியர்கள் மீட்பு - இந்திய கடற்படை அதிரடி
x
தினத்தந்தி 5 Jan 2024 2:20 PM GMT (Updated: 5 Jan 2024 2:39 PM GMT)

கடத்தப்பட்ட கப்பலுக்குள் இந்திய கடற்படை கமாண்டோக்கள் அதிரடியாக நுழைந்தனர்.

புதுடெல்லி,

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் கடற்பகுதியில் லைபீரியா நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இந்த கப்பலில் 15 இந்திய மாலுமிகள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியானது.

இதையடுத்து இந்திய கடற்படையினர் அதிரடியாக களத்தில் இறங்கி, கப்பலில் சிக்கியுள்ளவர்களை கடற்கொள்ளையர்களிடம் இருந்து மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்திய கடற்படைக்குச் சொந்தமான 'ஐ.என்.எஸ். சென்னை' கப்பல் சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ள கப்பலை நெருங்கிச் சென்றது.

கப்பலை விட்டு கொள்ளையர்கள் வெளியேற ஹெலிகாப்டர் மூலம் இந்திய கடற்படையினர் எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து இந்திய கடற்படை கமாண்டோக்கள் கடத்தப்பட்ட கப்பலுக்குள் அதிரடியாக நுழைந்தனர். இதையடுத்து கப்பலில் இருந்த கடற்கொள்ளையர்கள் தப்பியோடிய நிலையில், 15 இந்திய மாலுமிகள் மற்றும் 6 பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களை இந்திய கடற்படையினர் பத்திரமாக மீட்டனர். கப்பல் தற்போது முழுமையான சோதனைக்குப் பின் மீண்டும் புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story