அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்கு கப்பல் - மீட்புப்பணிக்கு விரைந்த இந்திய போர் கப்பல்கள்...!


அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்கு கப்பல் - மீட்புப்பணிக்கு விரைந்த இந்திய போர் கப்பல்கள்...!
x

கடத்தப்படுவதற்கு முன் கப்பலில் இருந்த மாலுமிகள் உதவிகேட்டு அழைப்பு விடுத்துள்ளனர். அந்த அழைப்பை ஏற்று இந்திய போர் கப்பல்கள் விரைந்துள்ளன.

டெல்லி,

ஐரோப்பாவின் மால்டோவா நாட்டுக்கு சொந்தமான எம்.வி. ருயின் என்ற சரக்கு கப்பல் இன்று காலை அரபிக்கடலில் பயணித்துக்கொண்டிருந்தது. சோமாலியாவுக்கு சென்றுகொண்டிருந்த இந்த சரக்கு கப்பலில் 18 மாலுமிகள் பயணித்தனர்.

அரபிக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது சரக்கு கப்பலில் ஏறிய கடற்கொள்ளையர்கள் மாலுமிகளை சிறைப்பிடித்தனர். மேலும், கப்பலை கடத்திச்சென்றனர்.

கப்பலை கொள்ளையர்கள் கைப்பற்றுவதற்கு முன் கப்பல் கேப்டன் உதவிகோரி 'மேடே' அழைப்பு விடுத்துள்ளார்.

அப்போது, ஏடன் வளைகுடா பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த இந்திய போர் கப்பல் மற்றும் கடற்படை ரோந்து விமானங்களுக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்திய போர் கப்பல்கள் மற்றும் ரோந்து விமானங்களும் உடனடியாக கடத்தப்பட்ட சரக்கு கப்பலை மீட்க புறப்பட்டன.

கடத்தப்பட்ட மால்டோவா சரக்கு கப்பல் தற்போது சோமாலியா நோக்கி சென்றுகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சோமாலியாவில் இருந்து பிரிந்த மாகாணமான பண்ட்லெண்ட் என்ற பகுதிக்கு சரக்கு கப்பல் சென்றுகொண்டிருப்பதால் அதை மீட்க இந்திய கடற்படை போர் கப்பல்கள் விரைந்துள்ளன. சோமாலியாவின் பண்ட்லெண்ட் மாகாணம் கடற்கொள்ளையர்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய போர் கப்பல்களை தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனின் கடற்படையும் கடத்தப்பட்ட கப்பலை மீட்க சோமாலியா நோக்கி விரைந்துள்ளது.


Next Story