அனைத்து ரெயில்களிலும் முன்பதிவை பொறுத்து ஏ.சி. வகுப்புகளில் 25 சதவீத கட்டண குறைப்பு - ரெயில்வே வாரியம்


அனைத்து ரெயில்களிலும் முன்பதிவை பொறுத்து ஏ.சி. வகுப்புகளில் 25 சதவீத கட்டண குறைப்பு - ரெயில்வே வாரியம்
x

வந்தே பாரத் உள்பட அனைத்து ரெயில்களிலும் முன்பதிவை பொறுத்து ஏ.சி. இருக்கை வசதி பெட்டிகளில் 25 சதவீதம் கட்டணத்தை குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

கட்டண தள்ளுபடி திட்டம்

ரெயில் பெட்டிகளில் அதிகபட்ச பயணிகள் பயணிக்கும் வகையில் கட்டண தள்ளுபடி திட்டத்தை அமல்படுத்த ரெயில்வே அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இந்த திட்டம் ஏ.சி. இருக்கை வசதி பெட்டிகள், ஏ.சி. இருக்கை வசதி கொண்ட எக்சிக்யூட்டிவ் வகுப்புகளுக்கு பொருந்தும். இதில் விமானம் போன்ற வசதி கொண்ட அனுபூதி பெட்டிகள், மேற்பரப்பு கண்ணாடியால் ஆன விஸ்டாடோம் பெட்டிகளும் அடங்கும் என ரெயில்வே வாரியம் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சம் 25 சதவீதம்

தள்ளுபடியானது அடிப்படை கட்டணத்தில் அதிகபட்சம் 25 சதவீதம் வரை இருக்கும். அதேநேரம், முன்பதிவு கட்டணம், சூப்பர் பாஸ்ட் கூடுதல் கட்டணம், ஜி.எஸ்.டி. போன்றவை தனியாக வசூலிக்கப்படும். கடந்த 30 நாட்களில் 50 சதவீதத்துக்கு குறைவாக இருக்கை நிரம்பிய வகுப்புகளை கொண்ட ரெயில்கள் இந்த கட்டண குறைப்புக்கு பரிசீலிக்கப்படும்.

உடனடியாக அமல்

இந்த கட்டண குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது. ஆனால் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு தள்ளுபடி கட்டணத்தொகை திருப்பி வழங்கப்படாது.

விடுமுறை, பண்டிகை காலங்களின்போது இயக்கப்படும் சிறப்பு ரெயில்களுக்கு இந்த கட்டண குறைப்பு திட்டம் பொருந்தாது. பயண கட்டணத்தில் தள்ளுபடி வழங்குவது குறித்து தீர்மானிப்பதற்கு ரெயில்வே மண்டலங்களின் முதன்மை தலைமை வர்த்தக மேலாளர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வாறு ரெயில்வே வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story