உக்ரைனில் படித்த இந்திய மாணவா்கள் ரஷியாவில் படிப்பை தொடரலாம் - ரஷிய துணை தூதர்
உக்ரைனில் படிப்பை பாதியிலேயே விட்டு சென்ற இந்திய மாணவர்கள் ரஷியாவில் படிப்பை தொடரலாம் என ரஷிய துணை தூதர் ரோமன் பாபுஷ்கின் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தனது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வரும் நிலையில், 100 நாட்களைக் கடந்து இந்த போரானது இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
அங்கு மருத்துவம் படிப்பதற்காக இந்தியாவில் இருந்து சென்ற மாணவர்கள், மத்திய அரசின் அவசர கால நடவடிக்கை மூலமாக இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர். உக்ரைனில் தற்போது வரை போர் முடிவுக்கு வராததால், அங்கிருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் தங்கள் மருத்துவ படிப்பை மீண்டும் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், உக்ரைனில் படிப்பை பாதியிலேயே விட்டு சென்ற இந்திய மாணவர்கள், தங்களது முந்தைய கல்வி ஆண்டை இழக்காமல் இருக்க ரஷிய பல்கலைகழகங்களில் அட்மிஷன் வழங்கப்படும் என ரஷ்ய தூதரகத்தின் துணைத் தலைவர் ரோமன் பாபுஷ்கின் தெரிவித்துள்ளார்.