இந்தியாவில் முதல்முறையாக முழுமையான கை மாற்று அறுவை சிகிச்சை; கேரள ஆஸ்பத்திரி அசத்தல்
இந்தியாவில் முதல் முறையாக முழு அளவிலான கைமாற்று அறுவை சிகிச்சை கேரள ஆஸ்பத்திரியில் 2 பேருக்கு நடத்தப்பட்டுள்ளது.
கைகளை இழந்தவர்கள்
கர்நாடக மாநிலத்தில் அமரேஷ் (25 வயது) என்ற ஒருவரும், ஈராக்கைச் சேர்ந்த யூசுப் ஹசன் சயீத் (29) என்பவரும் மின்சாரம் தாக்கி தங்கள் இரு கைகளையும் இழந்தனர்.
இவர்களுக்காக கேரளாவில் சாலை விபத்துகளில் மூளைச்சாவு அடைந்த இருவரிடம் இருந்து கைகள் தானமாக பெறப்பட்டன.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
இதையடுத்து அமரேசுக்கும், யூசுப் ஹசன் சயீத்துக்கும் கைமாற்று அறுவை சிகிச்சை (தோள்பட்டையில் இருந்து முழுக்கை) கொச்சியில் உள்ள அம்ரிதா ஆஸ்பத்திரியில் நடத்த முடிவானது.
அதன்படி அவர்கள் 2 பேருக்கும் கை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்தியாவில் முதன்முதலாக இந்த அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.
தானம் பெற்ற கைகள்
அமரேசுக்கு சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த வினோத் (54) என்பவருடைய கைகள் பொருத்தப்பட்டுள்ளன. யூசுப் ஹசன் சயீத்துக்கு சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆலப்புழையை சேர்ந்த அம்பிலி (39) என்ற பெண்ணின் கைகள் பொருத்தப்பட்டுள்ளன.
அமரேசுக்கு 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்சாரம் தாக்கி கைகளை இழந்தார்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளரான யூசுப் ஹசன், சுவரில் டிரில்லரைக் கொண்டு துளையிட்டபோது மின்சாரம் தாக்கி கைகளைப்பறிகொடுத்தார்.
20 டாக்டர்கள் குழு
இவர்களுக்கு கைமாற்று அறுவை சிகிச்சையை அம்ரிதா ஆஸ்பத்திரியின் பிளாஸ்டிக் மற்றும் மறுகட்டமைப்பு துறை தலைவர் டாக்டர் சுப்பிரமணிய அய்யர், அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மொகித் சர்மா ஆகியோர் தலைமையிலான 20 டாக்டர்கள் குழுவினர்தான் நடத்தி அசத்தி உள்ளனர். கொச்சி அம்ரிதா ஆஸ்பத்திரி கைமாற்று அறுவை சிகிச்சையில் முன்னோடியாக கருதப்படுகிறது.