இந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்ல 1.75 லட்சம் பேருக்கு அனுமதி - ஸ்மிருதி இரானி


இந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்ல 1.75 லட்சம் பேருக்கு அனுமதி - ஸ்மிருதி இரானி
x

கோப்புப்படம்

இந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்ல 1.75 லட்சம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

புதுடெல்லி,

சவுதி அரேபியாவுடனான இருதரப்பு ஒப்பந்தத்தின்படி, இந்த ஆண்டுக்கான இந்தியாவின் ஹஜ் பயணத்திற்கான ஒதுக்கீடு 1,75,025 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி அளித்த பதிலில், "ஹஜ் மேலாண்மை குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஹஜ் கமிட்டிகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் பலமுறை ஆலோசனை நடத்தியது. இதில் இந்தியாவுக்கான முந்தைய ஹஜ் ஒதுக்கீட்டை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் ஹஜ் தொடர்பான சவுதி அரேபியா உடனான வருடாந்திர இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ்இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருந்தபோதும் இந்தியாவுக்கான முந்தைய ஒதுக்கீடு மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 2023-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 1,75,025 யாத்ரீகர்கள் ஹஜ் யாத்திரை செல்ல முடியும்" என்று அவர் தெரிவித்தார்.


Next Story