கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது யார்..? பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு


கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது யார்..? பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 Aug 2023 5:56 AM IST (Updated: 11 Aug 2023 6:08 AM IST)
t-max-icont-min-icon

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது யார்? என்று கேள்வி எழுப்பியதுடன் இந்த விவகாரம் தொடர்பாக பரபரப்பு குற்றம்சாட்டி பிரதமர் மோடி பேசினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 3 நாட்களாக நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து பிரதமர் மோடி பேசும்போது, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியான தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த 2 நாட்களுக்குமுன்பு காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான தி.மு.க.வின் அமைச்சர் ஒருவர், இந்தியா என்பது வடஇந்தியா என்று கூறுகிறார். தமிழ்நாடு இந்தியாவில் இல்லை என்று கூறுவதா?. தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி தானே.

ராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர்., அப்துல்கலாம் பிறந்த மண்ணை இந்தியாவில் இருந்து பிரிக்க பார்க்கிறார்கள். இதற்கு எதிர்க்கட்சியினர் என்ன பதில் சொல்ல போகிறார்கள்?.

கச்சத்தீவை கொடுத்தது யார்?

தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று எனக்கு தொடர்ந்து கடிதம் எழுதிக்கொண்டு இருக்கிறது. கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கும், இலங்கைக்கும் இடையேவுள்ள தீவு. சிலர் அதை மற்றொரு நாட்டுக்கு (இலங்கைக்கு) கொடுத்துவிட்டனர். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. அது பாரதத்தாயின் ஒரு பகுதி இல்லையா?. 1962-ம் ஆண்டுக்கு பின்னர் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. இவ்வாறு மோடி பேசினார்.

பாரத மாதாவுக்கு அவமரியாதை

விருதுநகர் பா.ஜனதா அலுவலகத்தில் பாரத மாதா சிலை அகற்றப்பட்டதை குறிப்பிட்ட பிரதமர், தமிழகத்தில் பாரத மாதாவுக்கு அவமரியாதை செய்கிறார்கள் என்று தெரிவித்தார்.


Next Story