40 சதவீத கமிஷன் உள்பட பா.ஜனதா ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை - கர்நாடக மந்திரி எம்.பி.பட்டீல்
40 சதவீத கமிஷன் உள்பட பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கர்நாடக மந்திரி எம்.பி.பட்டீல் தெரிவித்துள்ளார்.
கொப்பலில் நேற்று மந்திரி எம்.பி.பட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
40 சதவீத கமிஷன்
காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து தேர்தலுக்கு முன்பாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முழு கவனத்தையும் செலுத்தி இருந்தோம். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும், சொல்வதுபடி நடந்து கொள்வதும் தான் காங்கிரசின் வழக்கமாகும். தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை முதல்-மந்திரி சித்தராமையா நேற்று (நேற்று முன்தினம்) நிறைவேற்றி இருக்கிறார்.
இனிவரும் நாட்களில் பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற ஊழல், பிற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதில் கவனம் செலுத்துவோம். பா.ஜனதா ஆட்சியில் அரசு ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீத கமிஷன் பெறப்பட்டது. அதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும்.
முறைகேடுகள் குறித்து விசாரணை
இதுதவிர கொரோனா சந்தர்ப்பத்தில் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வாங்கியது, நிவாரண நிதி வழங்கியது, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு என பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற அனைத்து முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். தவறு செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜனதாவில் இருந்து காங்கிரசுக்கு வந்த ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமண் சவதிக்கு உரிய பதவி வழங்கப்படும்.
நாடாளுமன்ற தேர்தலில் ஜெகதீஷ் ஷெட்டர் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு செய்யும். தொழிற்சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் தொழில்கள் தான் மேற்கொள்ள வேண்டும். அந்த நிலங்களில் தொழில்கள் நடைபெறாமல், வேறு பணிகள் நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு எம்.பி.பட்டீல் கூறினார்.