'டைட்டானிக்' கப்பலை காணச் சென்ற 5 பேர் பலி: சர்வதேச அமைப்புகள் விசாரணை


டைட்டானிக் கப்பலை காணச் சென்ற 5 பேர் பலி: சர்வதேச அமைப்புகள் விசாரணை
x

‘டைட்டானிக்’ கப்பலை காண நீர்மூழ்கியில் சென்ற 5 பேர் பலியானது தொடர்பாக சர்வதேச அமைப்புகள் விசாரிக்கின்றன.

பாஸ்டன்,

வட அட்லாண்டிக் கடலில் மூழ்கிக் கிடக்கும் 'டைட்டானிக்' கப்பலின் மிச்சங்களைக் காண 'டைட்டன்' என்ற நீர்மூழ்கியில் கோடீசுவரர்கள் 5 பேர் சென்றனர்.

கடந்த 18-ந் தேதி ஆழ்கடல் பயணத்தை தொடங்கிய இந்த நீர்மூழ்கி, மாயமானது. பின்னர், அது உள்வெடிப்பை சந்தித்து விபத்துக்குள்ளானதையும், அதில் சென்ற 5 பேரும் பலியாகிவிட்டதையும் அமெரிக்க கடலோர காவல் படை உறுதி செய்தது.

விசாரணை

இந்த நிலையில், 'டைட்டன்' நீர்மூழ்கி விபத்து குறித்து, அமெரிக்க கடலோர காவல் படை, அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், பிரான்ஸ் கடல் விபத்து மரண விசாரணை வாரியம் மற்றும் இங்கிலாந்து கடல் விபத்து விசாரணைப் பிரிவு ஆகியவை இணைந்து விசாரணை நடத்துகின்றன.

எப்போது முடியும்?

இதுதொடர்பாக, அமெரிக்க கடலோர காவல் படையின் கேப்டனும், அதன் தலைமை விசாரணை அதிகாரியுமான ஜேசன் நியூபார் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், விபத்து நடந்த கடலடிப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. எதனால் நீர்மூழ்கியில் உள்வெடிப்பு ஏற்பட்டது என்று விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார். இந்த விசாரணை எப்போது முடிவடையும் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.

ஆனால், ஆழ்கடலில் 12 ஆயிரத்து 500 அடியில் கிடக்கும் நீர்மூழ்கியின் சிதைவுகள் குறித்து விசாரிப்பதற்கு அதிக சிரமமும், நீண்ட காலமும் ஆகும் என்று விசாரணை வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story