வாடிக்கையாளரின் ஐபோன் ஆர்டரை ரத்து செய்த பிளிப்கார்ட்.. அதிரடி உத்தரவு பிறப்பித்த நுகர்வோர் ஆணையம்


வாடிக்கையாளரின் ஐபோன் ஆர்டரை ரத்து செய்த பிளிப்கார்ட்..  அதிரடி உத்தரவு பிறப்பித்த நுகர்வோர் ஆணையம்
x
தினத்தந்தி 17 March 2024 11:35 AM GMT (Updated: 17 March 2024 12:13 PM GMT)

கூடுதல் லாபம் ஈட்ட வேண்டுமென்ற நோக்கத்தில் ஆர்டர் ரத்து செய்யப்பட்டிருப்பதாக நுகர்வோர் குறைதீர் ஆணையம் தெரிவித்தது.

மும்பை:

மராட்டிய மாநிலம் மும்பை தாதர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி பிரபல ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் ஐபோன் ஆர்டர் செய்துள்ளார். இதற்காக தனது கிரெடிட் கார்டை பயன்படுத்தி 39,628 ரூபாய் செலுத்தியுள்ளார். ஆர்டர் பதிவு செய்யப்பட்டு, ஜூலை 12-ம் தேதி ஐபோன் டெலிவரி செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால். 6 நாட்களுக்கு பிறகு பிளிப்கார்ட்டில் இருந்து அவருக்கு எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. அதில், அவரது ஐபோன் ஆர்டர் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பிளிப்கார்ட் நிறுவனத்தை தொடர்புகொண்டபோது, "டெலிவரி பார்ட்னரான இகார்ட் நிறுவனத்தின் டெலிவரிபாய் பலமுறை முயன்றும் உங்களை தொடர்பு கொள்ள முடியாததால் பொருளை டெலிவரி செய்ய முடியவில்லை, அதனால் ஆர்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது, மீண்டும் ஆர்டர் செய்யுங்கள்" என பதில் அளித்துள்ளனர். அதன்பின்னர் அவர் செலுத்திய தொகையை திருப்பி அனுப்பிவிட்டனர்.

இதையடுத்து அந்த வாடிக்கையாளர், மத்திய மும்பையில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் முறையிட்டார். பிளிப்கார்ட் நிறுவனம் தனது ஐபோன் ஆர்டரை ரத்து செய்ததன் மூலம் தனக்கு நஷ்டம் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், ஆன்லைன் மோசடிக்கு ஆளானதாகவும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார். இதற்காக தனக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நுகர்வோர் ஆணையம் அதிரடியான உத்தரவை பிறப்பித்தது. ஆர்டரை ரத்து செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான வாடிக்கையாளருக்கு பிளிப்கார்ட் நிறுவனம் 10,000 ரூபாய் இழப்பீடு மற்றும் வழக்கு செலவுக்காக 3,000 ரூபாய் வழங்கவேண்டும் என உத்தரவிட்டது.

கூடுதல் லாபம் ஈட்ட வேண்டுமென்ற நோக்கத்தில் ஆர்டர் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இது சேவையின் குறைபாடு மற்றும் நியாயமற்றது என்று நுகர்வோர் குறைதீர் ஆணையம் தெரிவித்தது. கடந்த மாத இறுதியில் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், விரிவான உத்தரவு இன்று வெளியானது.

வழக்கு விசாரணையின்போது, பிளிப்கார்ட் ஒரு ஆன்லைன் தளமாக, இடைத்தரகராக செயல்படுவதாகவும், மேடையில் உள்ள அனைத்து தயாரிப்புகளும் சுயாதீன மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களால் விற்கப்பட்டு வழங்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

"இந்த வழக்கில் விற்பனையாளர் இன்டர்நேஷனல் வேல்யூ ரீடெய்ல் பிரைவேட் லிமிடெட் ஆகும், புகார்தாரருக்கும் விற்பனையாளருக்கும் இடையே நடந்த முழு பணப்பரிவர்த்தனையிலும் பிளிப்கார்டிற்கு எந்த சம்பந்தமும் இல்லை. வாடிக்கையாளருக்கு பணம் திரும்ப செலுத்தப்பட்டது. மனுதாரருக்கும் விற்பனையாளருக்கும் இடையிலான பிரச்சினை என்பதால் பிளிப்கார்ட் மீது நடவடிக்கை எடுக்க எந்த காரணமும் இல்லை" என்றும் பிளிப்கார்ட் வாதிட்டது.

ஆனால் இந்த வாதத்தை நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஏற்க மறுத்ததுடன், பிளிப்கார்ட் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தது.

"புகார்தாரர் பிளிப்கார்ட் நிறுவனத்தை தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசியபோது, அவரது கோரிக்கை குறித்து கவனிக்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட நிலையிலும், ஆர்டரை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்துள்ளது. விற்பனையாளர் அல்லது பிளிப்கார்ட் கூறியதுபோன்று, டெலிவரி செய்வதற்கான முயற்சிகள் பற்றிய எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.

ஆர்டர் செய்த பொருளின் விலை சுமார் ரூ.7,000 அதிகரித்துள்ளதால், அந்த ஆர்டர் ரத்து செய்யப்பட்டு, புதிதாக ஆர்டர் செய்யும்படி அவரிடம் கூறப்பட்டிருக்கிறது. கூடுதல் லாபம் ஈட்டுவதற்காக பிளிப்கார்ட் வேண்டுமென்றே இதைச் செய்திருக்கிறது" என ஆணையம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.


Next Story