செலவினங்களை அதிகரித்துவிட்டு நாடாளுமன்ற விவாதத்திலிருந்து பிரதமர் விலகுகிறார் - பிரியங்கா காந்தி கேள்வி


செலவினங்களை அதிகரித்துவிட்டு நாடாளுமன்ற விவாதத்திலிருந்து பிரதமர் விலகுகிறார் - பிரியங்கா காந்தி கேள்வி
x

Image Courtesy : PTI 

பணவீக்கம் பற்றி விவாதிப்பது நாடாளுமன்றதிற்கு எதிரானதா என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளிலேயே விலைவாசி உயர்வு, அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மீது ஜி.எஸ்.டி. விதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டியதால் இரு சபைகளிலும் அமளி நிலவியது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில் அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்பப் பெறக் கோரி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சிகள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டன. பணவீக்கத்தைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கூட்டணி கட்சி சார்பில் மக்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில் செலவினங்களை அதிகரித்து விட்டு பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அது குறித்த விவாதத்தில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் பொது செயலர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது :

பாஜக தலைமையிலான அரசு, மாவு, தானியங்கள், வெல்லம் மற்றும் தயிர் மீது ஜிஎஸ்டி விதித்ததன் மூலம் பணவீக்கத்தின் சுமையை மேலும் அதிகரித்துள்ளது. நரேந்திர மோடி செலவினங்களை அதிகரித்துவிட்டு அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் செய்வதிலிருந்து பின்வாங்குகிறார். பணவீக்கம் பற்றி விவாதிப்பது நாடாளுமன்றதிற்கு எதிரானதா?.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story