கர்நாடகத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட முதல்-மந்திரி தயாரா?- காங்கிரஸ் கேள்வி
கர்நாடகத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட முதல்-மந்திரி தயாரா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் செயல் தலைவர் ராமலிங்கரெட்டி நிருபர்களிடம் கூறியாதாவது:-
பா.ஜனதா அரசின் 40 சதவீத கமிஷனுக்கு எதிராக காங்கிரஸ் பிரசாரம் செய்து வருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் முதல்-மந்திரியின் முக்கிய செயலாளர் மஞ்சுநாத், அரசு அலுவலகங்களுக்கு முன்பாக ஊழலுக்கு எதிராக அறிவிப்பு பலகை வைக்கும் பிரசாரம் வருகிற 2-ந் தேதி காந்தி ஜெயந்தியில் இருந்து தொடங்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். எங்களுக்கு (அரசு அதிகாரிகள்) யாரும் லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை, நாங்கள் ஊழல் அதிகாரிகள் இல்லை என்ற வாசகத்துடன் அந்த அறிவிப்பு பலகை இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் 40 சதவீத கமிஷன் பெறப்படுவது இந்த அறிவிப்பு மூலமாக உறுதியாகிறது.
காங்கிரஸ் கட்சி கூறும் ஊழல் குற்றச்சாட்டு குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட தயாரா?. ஊழல் விவகாரத்தில் வெறும் அதிகாரிகள் மட்டுமே கைது செய்யப்படுகிறார்கள். நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டால், அரசு செய்த ஊழல்களும் வெளியே வந்து விடும். மக்களின் கவனத்தை திசை திருப்ப அரசு அலுவலகங்களில் ஊழலுக்கு எதிராக அறிவிப்பு பலகை வைக்கும் பிரசாரத்தை முதல்-மந்திரி தொடங்கி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.