தேசியவாத காங்கிரசுக்கு அமலாக்க துறை நெருக்கடியா...? செயல் தலைவர் பதில்


தேசியவாத காங்கிரசுக்கு அமலாக்க துறை நெருக்கடியா...? செயல் தலைவர் பதில்
x

ஷிண்டே-பட்னாவிஸ் தலைமையிலான அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் இணைந்த நிலையில், அக்கட்சிக்கு அமலாக்க துறையால் நெருக்கடியா...? என்ற கேள்விக்கு செயல் தலைவர் பதில் அளித்து உள்ளார்.

புனே,

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உடனான மோதலால் கட்சியை உடைத்து, தேசியவாத காங்கிரசில் இருந்து அஜித்பவார் உள்ளிட்டோர் விலகி ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் இன்று இணைந்தனர்.

இந்தநிலையில், சிவசேனா - பா.ஜ.க. கூட்டணி அரசில் அமைச்சராக பதவியேற்று கொண்டார் அஜித்பவார். அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 8 பேருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்து உள்ளார்.

ஏற்கனவே தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்-மந்திரியாக உள்ள நிலையில் அஜித் பவாரும் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார். எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரசுக்கு அமலாக்க துறையிடம் இருந்து மறைமுக நெருக்கடி கொடுக்கப்பட்டு உள்ளது என அக்கட்சியின் தலைவர் சரத் பவார் கூறினார். எனினும், நடந்தது பற்றி கவலை இல்லை என்றும் கட்சியை வலுப்படுத்த மீண்டும் பணியாற்றுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுபற்றி தேசியவாத காங்கிரசின் செயல் தலைவர் பிரபுல் பட்டேல் கூறும்போது, எங்களுடைய தலைவர் சரத் பவார் கூறியது பற்றி நான் எதுவும் கூறமாட்டேன். அவர் மதிப்புக்குரிய நபர்.

நாங்கள் எடுக்கும் எந்த முடிவும், செய்தியாளர்கள் சந்திப்பில் அஜித் பவார் கூறியது போன்று, அது கட்சியின் முடிவு. ஒரு கூட்டு முடிவு. யாரிடம் இருந்தும் நெருக்கடி வரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

சரத் பவார் கூறும்போது, பிரபுல் பட்டேல் மற்றும் சுனில் தத்காரே உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அவர்களுடைய பொறுப்பை அவர்கள் பின்பற்றவில்லை என்றும் கூறினார்.

சிவசேனா-பா.ஜ.க. அரசில் இணைந்த சிலர் அமலாக்க துறையின் வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர் என்றும் சரத் பவார் கூறினார். அவர்கள் அரசில் இணைந்தது ஒரு கொள்ளை சம்பவம் என கூறியதுடன், இது ஒரு சிறிய விசயம் இல்லை என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து, வருகிற 6-ந்தேதி அனைத்து தலைவர்களுடனான கூட்டம் ஒன்றை நடத்த அவர் முடிவு செய்து உள்ளார். அதில், பல முக்கிய முடிவுகள் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.


Next Story