போலி செய்திகள் பற்றி ஐ.டி. விதிகளில் திருத்தம்: பத்திரிகை துறையினருடன் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்ள வேண்டுகோள்


போலி செய்திகள் பற்றி ஐ.டி. விதிகளில் திருத்தம்:  பத்திரிகை துறையினருடன் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்ள வேண்டுகோள்
x

போலி செய்திகளை பற்றிய ஐ.டி. விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் முன் மத்திய அரசு பத்திரிகை துறையினருடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.



புதுடெல்லி,


போலி செய்திகள் ஊடகங்களில் வெளிவராமல் தடுக்கும் வகையில், மத்திய அரசால் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் அது, வெளிப்படையான ஆலோசனைக்கு விடப்பட்டது.

இந்நிலையில், ஊடகங்களுக்கான ஐ.டி. விதிகள் மேம்படுத்தப்பட்டு, அதுபற்றிய விவரங்கள் கடந்த செவ்வாய் கிழமை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டது.

இதற்கு இந்திய பத்திரிகையாளர்கள் குழு அதிர்ச்சி தெரிவித்து உள்ளது. இதுபற்றி வெளியிடப்பட்ட அறிக்கையில், ஐ.டி. விதிகளில் மேற்கொள்ளப்படும் இந்த புதிய சீர்திருத்தங்களை முழுவதும் நீக்கும்படி அரசுக்கு வேண்டுகோள் விடப்படுகிறது.

டிஜிட்டல் மீடியாவுக்கு ஒழுங்குமுறை விதிகளை வகுப்பதில், பத்திரிகை துறையினர், ஊடக அமைப்புகள் மற்றும் தொடர்புடைய பிற பங்குதாரர்களுடன் மத்திய அரசு அர்த்தமுள்ள ஆலோசனைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தி உள்ளது.

போலி செய்திகள் என முடிவு செய்வது, மத்திய அரசின் தனிப்பட்ட கைகளில் இல்லை. அது ஊடகங்களை தணிக்கை செய்வதில் கொண்டு சென்று விட்டு விடும் என்றும் தெரிவித்து உள்ளது.

ஒரு செய்தி உண்மை தன்மை கொண்டவையா, சரியானவையா என்பது பற்றி கண்டறிய பல்வேறு சட்டங்கள் முன்பே உள்ளன. இந்த புதிய நடைமுறையானது, அடிப்படையில் பத்திரிகையின் சுதந்திரம் எளிதில் நசுக்கப்படும் வகையிலேயே உள்ளது. பத்திரிகை வாரியத்திற்கு அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிற அமைப்புக்கு முழு அதிகாரமும் வழங்கப்படும்போது, பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படும் சூழல் உள்ளது.

அரசுக்கு சிக்கல் என நினைக்கும் தகவல்களை நீக்க ஆன்லைன் ஊடகங்களை கட்டாயப்படுத்துவதற்கும் வழியேற்படுத்தி விடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story