பணமோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விசாரணைக்கு ஆஜர்


பணமோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விசாரணைக்கு ஆஜர்
x

Image Courtesy: Jacqueline Fernandez (Instagram)

பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

புதுடெல்லி,

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி மோசடி செயலில் ஈடுபட்டு வந்தார்.

2017-ம் ஆண்டு இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டி.டி.வி. தினகரன் சார்பில் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற போது அவர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

சுகேஷ் சந்திரசேகர் ஏற்கனவே பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது 2 தொழில் அதிபருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அப்போது ஜாமீன் பெற்று தருவதாக கூறி சுகேஷ் சந்திரசேகர் தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்துள்ளார். இதையடுத்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக சுகேஷ், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்துள்ளது. மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

சுகேஷ் சந்திரசேகரின் குற்றப் பின்னணி தெரிந்து இருந்தும் அவருடன் ஜாக்குலின் பழகியதுடன் பரிசு பொருட்களை பெற்றுள்ளார் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. சுகேஷ் சந்திரசேகரை நடிகை ஜாக்குலினுக்கு அறிமுகம் செய்துவைத்த பிங்கி இராணி என்பவர் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றிருந்தது.

இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடிகை ஜாக்குலின், பிங்கி இராணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 12-ம் தேதிகளில் ஜாக்குலின் பெர்ண்டானசுக்கு டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், அந்த இரு தேதிகளிலும் விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணைக்கு செப்டம்பர் 14-ம் தேதி ஆஜராகும்படி ஜாக்குலினுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், பணமோசடி வழக்கில் விசாரணைக்காக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இன்று ஆஜராகியுள்ளார். பிங்கி இராணியும் விசாரணைக்காக குற்றப்பிரிவு போலீஸ் முன் ஆஜராகியுள்ளார். இருவரிடமும் விசாரணை தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story