மத்தியப்பிரதேசத்தில் ஜவஹர்லால் நேரு சிலை சேதம்: வீடியோ வைரலானதையடுத்து 6 பேர் கைது..!
மத்தியப்பிரதேசத்தில் ஜவஹர்லால் நேரு சிலையை சேதப்படுத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
போபால்,
மத்திய பிரதேச மாநிலம் சத்னாவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள தாவரி சதுக்கத்தில் நேற்று மாலை ஜவஹர்லால் நேருவின் சிலையை ஒரு கும்பல் சேதப்படுத்தினர். கட்டைகள் மற்றும் சுத்தியலால் அவர்கள் சிலையை சேதப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து 6 பேரை போலீசார் கைது செய்தனர். அந்த வீடியோவில், காவி கொடிகளை ஏந்தியவாறு அந்த கும்பல் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
நேரு சிலையை சேதப்படுத்தியதற்காகவும், சமூக சீர்கேட்டை ஏற்படுத்தியதற்காகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், இந்த விவகாரத்தை அரசு விசாரித்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.