ஜெயலலிதாவின் 28 வகையான பொருட்கள் உதவியாளரிடம் ஒப்படைக்கப்பட்டன-லஞ்ச ஒழிப்பு போலீஸ் கடிதம்


ஜெயலலிதாவின் 28 வகையான பொருட்கள் உதவியாளரிடம் ஒப்படைக்கப்பட்டன-லஞ்ச ஒழிப்பு போலீஸ் கடிதம்
x

சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 28 வகையான பொருட்கள் ஜெயலலிதாவின் உதவியாளரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டதாக பெங்களூரு சமூக ஆர்வலருக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கடிதம் மூலம் பதில் அளித்து தெரிவித்துள்ளது.

பெங்களூரு:-

சொத்து குவிப்பு வழக்கு

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்தாலும், சுப்ரீம் கோர்ட்டு அதை உறுதி செய்து தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பு ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூன்று பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்து விடுதலை ஆகினர்.

30 கிலோ தங்கம்-வைர நகைகள்

இந்த நிலையில் இந்த சொத்து குவிப்பு வழக்கில் 30 கிலோ தங்க, வைர நகைகள், புடவைகள், செருப்புகள் உள்பட 29 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த பொருட்களை ஏலம் விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி பெங்களூருவை சோ்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நடைபெற்ற விசாரணையின்போது, அரசு சிறப்பு வக்கீலாக கிரண் ஜவளி நியமிக்கப்பட்டார். அவர் இந்த வழக்கில் ஆஜராகி வந்தார்.

ஜெ.தீபா மனு தள்ளுபடி

இந்த நிலையில் ஜெயலலிதாவின் வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர், அந்த சிறப்பு கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்து, தாங்கள் வாரிசுகள் என்பதால் ஜெயலலிதாவின் பொருட்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிடக் கோரினர். இந்த மனுவை சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு தொடர்பான பொருட்களில் கர்நாடக அரசிடம் தற்போது 30 கிலோ தங்கம், வைரம் போன்ற ஆபரணங்கள் மட்டுமே உள்ளன. மீதமுள்ள 28 வகையான பொருட்கள் குறித்த தகவலை சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்திக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவிக்க வேண்டும் என்று வாய்மொழியாக நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடிதம்

இதற்கிடையே கடந்த 9-5-2023 அன்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ஜெயலலிதாவின் 28 வகையான பொருட்களை பெங்களூரு கோர்ட்டில் உடனடியாக ஒப்படைக்குமாறு அவர் கோரினார்.

இந்த நிலையில் நரசிம்மமூர்த்திக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் வடக்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு சியாமளாதேவி அதற்கு தபால் மூலம் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

பறிமுதல் செய்யப்படவில்லை

அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

''நீங்கள் கடந்த 9-5-2023 அன்று எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை.

அதற்கு பதிலாக அந்த பொருட்கள் மதிப்பீட்டு பணிகளுக்கு பிறகு பரிந்துரைக்கப்பட்ட நபரான (நாமினி) பாஸ்கரனிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக எங்களிடம் எதுவும் நிலுவையில் இல்லை''. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

யார் அந்த பாஸ்கரன்?

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை கடிதத்தில் கூறப்பட்டுள்ள நபரான பாஸ்கரன் யார்? என்பது தெளிவாக கூறப்படவில்லை. ஏனென்றால், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் சகோதரியான ஸ்ரீதளா தேவியின் கணவரது பெயரும் பாஸ்கரன் (வயது 58). இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 17-ந்தேதி மரணம் அடைந்தார்.

இன்னொரு பாஸ்கரன், டி.டி.வி.தினகரனின் சகோதரர் ஆவார். ஆனால், இந்த இரு பாஸ்கரனிடமும் ஜெயலலிதாவின் 28 வகையான பொருட்கள் ஒப்படைக்கப்படவில்லை. அப்படி என்றால், 28 வகையான பொருட்களை பெற்ற பாஸ்கரன் யார்? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பாஸ்கரன் என்பவரிடம்தான் 28 வகையான பொருட்களும் ஒப்படைக்கப்பட்டதாக ஜெயலலிதா தரப்பு வக்கீல் ஒருவர் தெரிவித்தார்.


Next Story