ஹெப்ரியில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் ரூ.9 லட்சம் நகைகள் திருட்டு


ஹெப்ரியில்  தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் ரூ.9 லட்சம் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 3 Aug 2023 12:15 AM IST (Updated: 3 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஹெப்ரியில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் ரூ.9 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.

மங்களூரு-

உடுப்பி மாவட்டம் ஹெப்ரி தாலுகா இரியடுக்கா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அஞ்சாறு கிராமம் ஒந்திபெட்டு பகுதியில் வசித்து வருபவர் சங்கரஷெட்டி. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர் திரும்பி வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பொருட்கள் சிதறிக்கிடந்தன. அனைத்து அறைகளின் கதவுகளும் திறந்து கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ.9 லட்சம் மதிப்பிலான நகைகளும் திருடு போய் இருந்தன. யாரோ மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து நகைகளை திருடிச் சென்றுவிட்டது போலீசாருக்கு தெரியவந்தது.

இதுபற்றி சங்கரஷெட்டி இரியடுக்கா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.



Next Story