தேவியின் சாபம் ...! பரிகார பூஜை நடத்தி 55 பவுன் நகை, ரூ.1½ லட்சம் மோசடி- பெண் மந்திரவாதிக்கு வலை


தேவியின் சாபம் ...! பரிகார பூஜை நடத்தி 55 பவுன் நகை, ரூ.1½ லட்சம் மோசடி- பெண் மந்திரவாதிக்கு வலை
x
தினத்தந்தி 12 Dec 2022 11:45 AM GMT (Updated: 12 Dec 2022 11:45 AM GMT)

சில நாட்கள் கழித்து விஸ்வாம்பரனின் வீட்டுக்கு வந்த வித்யா, கடுமையான சாப தோஷம் இருப்பதால் வீட்டில் வைத்து தொடர்ந்து பரிகார பூஜை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் வெள்ளயாணி பகுதியை சேர்ந்தவர் விஸ்வாம்பரன் (வயது 65). இவருடைய குடும்பத்தில் சிலர் அடுத்தடுத்து மரணமடைந்தனர். இதனால் விஸ்வாம்பரன் மனமுடைந்த நிலையில் இருந்தார். இதனால் அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஜோதிடரை நேரில் சென்று பார்த்துள்ளார்.

அப்போது சில பரிகார பூஜைகள் நடத்த வேண்டும் என அந்த ஜோதிடர் கூறியுள்ளார். மேலும் குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள தெற்றியோடு தேவி என அழைக்கப்படும் வித்யா என்ற பெண் மந்திரவாதி இருக்கிறார்.

அவர் பரிகார பூஜை நடத்துவார் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு விஸ்வாம்பரன் களியக்காவிளை சென்று பெண் மந்திரவாதி வித்யாவை சந்தித்தார். அப்போது நான் நேரடியாக வீட்டுக்கு வந்து பரிகார பூஜை நடத்துகிறேன் என்று வித்யா கூறியுள்ளார்.

அதன்படி சில நாட்கள் கழித்து விஸ்வாம்பரனின் வீட்டுக்கு வந்த வித்யா, கடுமையான சாப தோஷம் இருப்பதால் வீட்டில் வைத்து தொடர்ந்து பரிகார பூஜை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

அடுத்த சில நாட்களில், விஸ்வாம்பரனின் வீட்டுக்கு வித்யா வந்தார். அவருடன் மேலும் சிலரும் வந்திருந்தனர். ஒவ்வொரு அறையாக வித்யா சுற்றி பார்த்தார். "வீடு முழுவதும் சாப தோஷம் இருக்கிறது. அதனால், படுக்கையறையில் பரிகார பூஜை நடத்த வேண்டும் என்றார். அதன்படி, அந்த வீட்டிலேயே ஒரு ரூமை, பூஜை அறையாக மாற்றம் செய்யப்பட்டது. அந்த வீட்டிலேயே ஒரு வாரத்திற்கு மேல் வித்யாவும், அவருடன் வந்தவர்களும் பூஜை நடத்தினார்கள். ஒரு வாரம் கழித்து, "ஐயோ. இத்தனை பூஜைகள் செய்தும், தேவியின் சாபம் கொஞ்சம் கூடகுறையவில்லையே" என்று வித்யா கவலையுடன் விஸ்வாம்பரனிடம் கூறினார்.

பிறகு, வீட்டில் உள்ள நகை, பணத்தை எல்லாம் மொத்தமாக எடுத்து வந்து பூஜையில் வையுங்கள், அதனுடன் சேர்த்து பூஜை நடத்த வேண்டும் என்றார்.. அதன்படியே, விஸ்வாம்பரனும் வீட்டில் இருந்த 55 பவுன் நகை, ரூ.1½ லட்சத்தை எடுத்து வந்து வித்யாவிடம் தந்தார். ஆனால் வித்யா, அந்த பணத்தையும் நகையையும் கையில் வாங்காமல், பூஜை அறையில் உள்ள பீரோவில் வைத்து விட்டு போகும்படி சொல்லி உள்ளார். பூஜையை முடித்ததும் 2 வாரம் கழித்து தன்னிடம் தெரிவித்து விட்டு பீரோவை திறந்து நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொள்ளும்படியும் சொல்லிவிட்டு வித்யா அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

2 வாரங்கள் ஆனது.. அப்போது வித்யாவை விஸ்வாம்பரன் தொடர்புகொண்டு, பீரோவை இப்போது திறக்கலாமா? என்று கேட்டுள்ளார். அதற்கு வித்யா, "தேவியின் சாபம் இன்னும் குறைவில்லை, 3 மாதம் கழித்து தான் பீரோவை ஓபன் செய்ய வேண்டும்" என்றார். விஸ்வாம்பரனும் 3 மாதம் காத்திருந்தார். மறுபடியும் வித்யாவிடம், "3 மாதம் முடிந்துவிட்டது, பீரோவை இப்போது திறக்கலாமா?" என்று கேட்டுள்ளார். அதற்கு வித்யா, "இப்போது வேண்டாம், ஒரு வருடம் கழித்து ஓபன் பண்ணுங்க" என்று சொல்லி உள்ளார். இப்போதுதான், விஸ்வாம்பரனுக்கு சந்தேகம் வந்தது.

உடனடியாக பூஜை ரூமுக்கு சென்று பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதில் வைத்திருந்த நகை, பணத்தை மொத்தமாக காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த விஸ்வாம்பரன் உடனடியாக வித்யாவை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லி உள்ளார். பணம், நகை எங்கே? என்று வித்யாவை கேட்டார். அதற்கு வித்யா, "அதையெல்லாம் தேவி, எனக்கே தந்துவிட்டாள், நீ இந்த விஷயத்தை போலீசில் சொன்னால், குடும்பத்தையே கொன்றுவிடுவதாக மிரட்டி உள்ளார்.

இதுகுறித்து விஸ்வாம்பரன் போலீசில் புகார் அளித்தா. போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், அதற்குள் மந்திரவாதி வித்யா மாயமாகிவிட்டார். போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.


Next Story