ஜார்க்கண்ட்: ஸ்டீல் ஆலையில் தீ விபத்து; 21 தொழிலாளர்களுக்கு சிகிச்சை


ஜார்க்கண்ட்:  ஸ்டீல் ஆலையில் தீ விபத்து; 21 தொழிலாளர்களுக்கு சிகிச்சை
x

ஜாரக்கண்டின் உருக்காலையில், கியாஸ் குழாயில் பராமரிப்பு பணிகள் நடந்தபோது குழாய் ஒன்றில் திடீரென வெடிப்பு ஏற்பட்டு, புகை ஆலை முழுவதும் பரவியது.

பொகாரோ,,

ஜாரக்கண்டின் பொகாரோ நகரில் இந்திய உருக்காலை நிறுவனம் (செயில் நிறுவனம்) அமைந்துள்ளது. இதில், இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். கியாஸ் குழாயில் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது குழாய் ஒன்றில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டு, புகை ஆலை முழுவதும் பரவியது.

ஆனால், அதில் இருந்து கியாஸ் கசிவு எதுவும் ஏற்படவில்லை. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச்சரிக்கை ஒலி அடித்தது. அனைத்து தொழிலாளர்களும் ஆலையில் இருந்து 5 கி.மீ. தொலைவுக்கு வெளியேறும்படி கேட்டு கொள்ளப்பட்டனர்.

இதன்பின்னர், தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு வந்து தீயை அணைக்க போராடினர். நீண்டநேரத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டு, நிலைமை முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என செயில் நிறுவன அதிகாரி கூறியுள்ளார்.

இதனால், புகையில் சிக்கி கொண்ட 21 தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டனர். இதன்பின்னர் அவர்களுடைய நிலைமை சீராகியுள்ளது.

எனினும், தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என மருத்துவ அறிக்கை தெரிவிக்கின்றது. தொடர்ந்து அந்த பகுதியில் மூத்த அதிகாரிகளும் முகாமிட்டு உள்ளனர்.


Next Story