முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை: மனோஜ் பாண்டே ஆச்சரிய அறிவிப்பு


முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை: மனோஜ் பாண்டே ஆச்சரிய அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Jan 2023 7:33 AM GMT (Updated: 14 Jan 2023 7:37 AM GMT)

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் நலனுக்காக முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களுடன் வேலை வாய்ப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது என மனோஜ் பாண்டே அறிவித்து உள்ளார்.புதுடெல்லி,


நாட்டில் முன்னாள் ஆயுத படை வீரர்கள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 14-ந்தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, முப்படைகளிலும் பணியாற்றி நாட்டுக்கு சேவை செய்து, வாழ்ந்து கொண்டிருக்கும் மற்றும் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவர்களது தேச பணி பாராட்டுக்கு உரியது என்று அங்கீகரிக்கும் வகையிலும் இந்த தினம் அமைந்துள்ளது.

இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் முப்படைகளின் தலைமை தளபதியான ஜெனரல் அனில் சவுகான் மலர் வளையம் வைத்து இன்று மரியாதை செலுத்தினார்.

இதேபோன்று, ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, விமான படை தலைமை தளபதி வி.ஆர். சவுத்ரி மற்றும் கடற்படை தலைமை தளபதி ஆர். ஹரி குமார் ஆகியோரும் தேசிய போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உள்ளனர்.

இதனை முன்னிட்டு, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, நம்முடைய ஓய்வு பெற்ற, முன்னாள் ராணுவ வீரர்களால் நாடு பெருமை கொள்கிறது. ஓய்வு பெற்ற பின்னர் மூத்த ராணுவ வீரர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக, ரெயில்வே, மெட்ரோ மற்றும் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களுடன் வேலை வாய்ப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது என அறிவித்து உள்ளார்.

அவர்களுக்கான சிகிச்சை பெறும் மருத்துவமனை எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இதேபோன்று, மருத்துவ சிகிச்சைக்காக செலவழித்த தொகையை ஆன்லைன் வழியே கோரி பெறுவதற்கான வசதிகளுக்கும் திட்டமிட்டு வருகிறோம் என கூறியுள்ளார். ஒரே நேரத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறும் பாலிகிளினிக்கிற்கான நிதி நிலையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.


Next Story