'ஆசிரியர்களுக்கு இணையான மதிப்பு பத்திரிக்கையாளர்களுக்கும் உண்டு' - ராஜ்நாத் சிங்


ஆசிரியர்களுக்கு இணையான மதிப்பு பத்திரிக்கையாளர்களுக்கும் உண்டு -  ராஜ்நாத் சிங்
x

தங்கள் போட்டியாளர்களை வெல்லும் நோக்கில் தவறான செய்திகளை பத்திரிக்கையாளர்கள் வெளியிடக்கூடாது என்று ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

புதுடெல்லி,

தேசிய வாராந்திர பத்திரிக்கையான 'பாஞ்சன்யா'வின் 75-வது ஆண்டு விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-

"பாஞ்சன்யா பத்திரிக்கை தனது 75-வது ஆண்டை நிறைவு செய்துள்ளது என்பது இந்திய பத்திரிகை உலகில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். நாட்டில் ஆசிரியர்களுக்கு இணையான மதிப்பு பத்திரிகையாளர்களுக்கும் உண்டு.

இன்றைய ஊடகவியலாளர்கள் பத்திரிக்கைத்துறையின் அடிப்படை நியதிகளான செய்தியின் துல்லியம், நேர்மை, உண்மைத்தன்மை மற்றும் சுதந்திரம் ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும். தங்கள் போட்டியாளர்களை வெல்லும் நோக்கில் தவறான செய்திகளை வெளியிடக்கூடாது.

எந்த வகையிலும் செய்திகளை சீர்குலைக்கும் எவரும், பத்திரிகையாளராக இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன். ஊடகங்கள் விமர்சிக்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை, ஆனால் தேச நலன் குறித்த கேள்வி இருக்கும் இடத்தில், விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காக விமர்சிப்பது சரியல்ல.

ஊடகங்கள் இந்த சமூகம் மற்றும் நாட்டின் ஒரு அங்கம். சமீபத்திய ஆண்டுகளில், ஊடகங்கள் மிகவும் நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான பொறுப்புகளை வகித்ததைக் கண்டோம். கொரோனா நெருக்கடியின் போது, பத்திரிகையாளர்கள் "கர்மயோகிகள்" போல் செயல்பட்டனர். தூய்மை இந்தியா திட்டத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.

இந்நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் ஊடகத்துறை முக்கிய தூண்களில் ஒன்றாக விளங்குகிறது. சுதந்திரத்திற்கான போராட்டத்தில், பத்திரிகை என்பது தகவல் மற்றும் தகவல்தொடர்புக்கான மிகவும் சக்திவாய்ந்த ஊடகமாக மாறியது. விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தலைவர்களும் தங்கள் செய்தித்தாள்களை வெளியிட வேண்டியிருந்தது. நமது சுதந்திரத்தின் பின்னணியில் பத்திரிக்கைகளும், செய்தி இதழ்களும் இருந்தன என்று சொன்னால் அது மிகையாகாது."

இவ்வாறு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


Next Story