டெல்லியில் ஜே.பி. நட்டாவுடன் சந்திரபாபு நாயுடு நேரில் சந்திப்பு; கூட்டணி பேச்சுவார்த்தை..?


டெல்லியில் ஜே.பி. நட்டாவுடன் சந்திரபாபு நாயுடு நேரில் சந்திப்பு; கூட்டணி பேச்சுவார்த்தை..?
x

டெல்லியில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய மந்திரி அமித்ஷாவை தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று நேரில் சந்தித்து பேசினார்.

நடப்பு ஆண்டின் இறுதியில் தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. இதனை முன்னிட்டு கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபட்டு உள்ளார்.

இந்த சந்திப்பு அரை மணிநேரம் நடந்தது. நடப்பு ஆண்டு நடைபெறும் தெலுங்கானா சட்டசபை தேர்தலில், பா.ஜ.க. மற்றும் தெலுங்கு தேச கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க கூடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2014-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி இடம் பெற்றிருந்தது. எனினும், ஆளும் கூட்டணியில் இருந்து 2018-ம் ஆண்டு மார்ச்சில், அக்கட்சி வெளியேறியது.

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர், ஆந்திர பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து பற்றிய விவகாரம் எதிரொலியாக கூட்டணி முறிவில் அக்கட்சி ஈடுபட்டது.

எனினும், சமீபத்தில் போர்ட் பிளேரில் நடந்த நகராட்சி தேர்தல்களில் இரு கட்சிகளும் ஒன்றிணைந்தன.

தெலுங்கு தேச கட்சியின் நிறுவனர் மற்றும் 7 ஆண்டுகளாக 3 முறை ஆந்திர பிரதேச முதல்-மந்திரியாக பதவி வகித்த என்.டி. ராமராவின் பிறந்த ஆண்டுதின கொண்டாட்டம் கடந்த மே மாதம் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு, கடந்த மாதம் இறுதியில் நடந்த மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அப்போது அவரை நினைவு கூர்ந்து பேசினார். அதனால், இந்த தேர்தலில் இரு கட்சிகள் கூட்டணி அமைத்து செயல்படுவதற்கான சாத்தியம் அதிகரித்து காணப்படுகிறது.


Next Story