7 ஆண்டு வழக்கு: தேசிய துப்பாக்கிச்சூடுதல் வீரர் கொலை - ஐகோர்ட்டு நீதிபதி மகள் கைது


7 ஆண்டு வழக்கு: தேசிய துப்பாக்கிச்சூடுதல் வீரர் கொலை - ஐகோர்ட்டு நீதிபதி மகள் கைது
x

தேசிய துப்பாக்கிச்சூடுதல் வீரரும், வழக்கறிஞருமான சுக்மன்பிரீத் சிங் 2015-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் வசித்து வந்த தேசிய துப்பாக்கிச்சூடுதல் வீரர் சுக்மன்பிரதீப் சிங். 35 வயதான சுக்மன் வழக்கறிஞராகவும் பணியாற்றிவந்தார். இவரது தந்தையான எஸ்எஸ் சிந்து பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

இதனிடையே, சுக்மன் கடந்த 2015 செப்டம்பர் 15-ம் தேதி சண்டிகரில் உள்ள ஒரு பூங்காவில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். சுக்மனை சுட்டுக்கொன்றது யார்? என போலீசார் விசாரித்துவந்தனர்.

ஆனால், இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் வழக்கு 2016-ம் ஆண்டு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கில் எதேனும் தகவல் கொடுப்பவர்களுக்கு 5 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த சம்மானத்தொகை கடந்த ஆண்டு 10 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடுதல் வீரரும், வழக்கறிஞருமான சுக்மன்பிரதீப் சிங் கொலை வழக்கில் முதல் நபரை சிபிஐ இன்று கைது செய்துள்ளது. இந்த வழக்கில் இமாச்சலப்பிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சபினா சிங்கின் மகள் கல்யாணி சிங்கை சிபிஐ இன்று கைது செய்துள்ளது.

சுக்மன் பிரதீப் கொலை வழக்கில் கல்யாணி சிங்கிற்கு தொடர்பு உள்ளதா? என நீண்டநாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது. தற்போது, இந்த கொலை வழக்கில் கல்யாணி கைது செய்யப்பட்டுள்ளார். சுக்மன் பிரதீப்பிற்கும் கல்யாணி சிங்கும் இடையே பழக்கம் இருந்துள்ளதாகவும், ஆனால் பிரச்சினை காரணமாக இந்த உறவில் ஏற்பட்ட விரிசலே சுக்மன் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சுக்மன் கொல்லப்பட்டபோது அவரை துப்பாக்கியால் சுட்ட நபருடன் கல்யாணி சிங் உடன் இருந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட கல்யாணி 4 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு கோர்ட்டு அனுமதியளித்துள்ளது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட கல்யாணி சிபிஐ காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

7 ஆண்டுகளுக்கு பின் தேசிய துப்பாக்கிச்சூடுதல் வீரர் சுக்மன் சிங் கொலை வழக்கில் முதல் கைது நடைபெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story