நீதிபதிகளையும் அவர்களின் தீர்ப்புகளையும் பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் - மத்திய சட்ட மந்திரி


நீதிபதிகளையும் அவர்களின் தீர்ப்புகளையும் பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் - மத்திய சட்ட மந்திரி
x

நீதித்துறையில் சுதந்திரத்தை பலவீனப்படுத்தினால் ஜனநாயகம் வெற்றிபெறாது என்று மத்திய சட்ட மந்திரி தெரிவித்தார்.

டெல்லி,

இந்திய நீதித்துறையில் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதற்காக கொலிஜியம் முறை பின்பற்றப்படுகிறது. கொலிஜியம் என்பது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையில் மூத்த நீதிபதிகள் 4 பேர் கொண்ட குழுவாகும். இந்த குழு சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டிற்கு புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுப்பது, நீதிபதிகளை இடமாற்றம் செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொலிஜியம் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய சட்ட அமைச்சகம் நீதிபதிகள் நியமன அறிவிப்பை வெளியிட்டு அதற்கான ஒப்புதலை ஜனாதிபதி அளிப்பார்.

இதனிடையே, கொலிஜியம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் அந்த முறையை மாற்றி நீதிபதிகளை மத்திய அரசே நியமிக்க வேண்டும் என மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கூறிவருகிறார். மேலும், துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கரும் நீதித்துறையில் கொலிஜியம் முறையில் சீர்திருத்தங்கள் தேவை கூறினார். இந்த கருத்துக்களால் நீதித்துறை - மத்திய அரசு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்நிலையில், மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ இன்று நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், நீதிபதிகளாக பதவியேற்ற பிறகு அவர்கள் தேர்தலில் சந்திக்கவேண்டியதில்லை அல்லது பொதுமக்களின் கண்காணிப்பை எதிர்கொள்ளவேண்டியதில்லை.

நீதிபதிகளையும், அவர்களின் தீர்ப்புகளையும், அவர்கள் தீர்ப்பு வழங்கும் விதத்தையும், அவர்களின் மதிப்பீடுகளையும் பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்த சமூகவலைதள காலகட்டத்தில் எதையும் மறைக்க முடியாது.

நீதித்துறையின் சுதந்திரத்தை பலவீனப்படுத்தினாலோ, அதன் அதிகாரம், மரியாதை, கண்ணியத்தை குறைத்தாலோ ஜனநாயகம் வெற்றிபெறாது.


Next Story