காவிரி விவகாரத்தில் பெங்களூரு மக்கள் குரல் கொடுக்க கோரி மண்டியாவில் நீரேற்று நிலையத்தை முற்றுகையிட்ட கன்னட அமைப்பினர்


காவிரி விவகாரத்தில் பெங்களூரு மக்கள் குரல் கொடுக்க கோரி மண்டியாவில் நீரேற்று நிலையத்தை முற்றுகையிட்ட கன்னட அமைப்பினர்
x
தினத்தந்தி 22 Sep 2023 6:45 PM GMT (Updated: 22 Sep 2023 6:46 PM GMT)

காவிரி விவகாரத்தில் பெங்களூரு மக்கள் கர்நாடகத்திற்கு ஆதரவாக குரல்கொடுக்க கோரி, மண்டியாவில் உள்ள பெங்களூருவுக்கான நீரேற்று நிலையத்தை கன்னட அமைப்பினர் முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மண்டியா:

தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 18-ந்தேதி கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 19-ந்தேதியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டும் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவில் தலையிட மறுத்தது.

இதனால் கர்நாடகத்தில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மைசூரு, மண்டியா, பெங்களூரு, சாம்ராஜ்நகர் ஆகிய பகுதிகளில் கன்னட அமைப்பினர், விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து இன்று (சனிக்கிழமை) முழுஅடைப்பு போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

நேற்றும் மண்டியா, மைசூருவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹலகூர் அருகே தொடேகாடனஹள்ளி கிராமத்தில் பெங்களூருவுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் நீரேற்று நிலையம் (பம்ப் ஹவுஸ்) அமைந்துள்ளது. இந்த நிலையில் காவிரி விவகாரத்தில் பெங்களூரு மக்களும் கர்நாடகத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்க வலியுறுத்தி நேற்று காலை கன்னட பாதுகாப்பு சேனா, சுவர்ண கர்நாடக பாதுகாப்பு அமைப்பு, கன்னட ஜனபாரா உள்ளிட்ட கன்னட அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பெங்களூருவுக்கு குடிநீர் வழங்கும் நீரேற்று நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தமிழக அரசுக்கு எதிராகவும், தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை உடனே நிறுத்த வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், நீரேற்று நிலையத்தின் நுழைவுவாயிலை மூடி கன்னட அமைப்பினரை தடுத்து நிறுத்தினர். அப்போதும், கன்னட அமைப்பினர் இரும்பு கதவு வழியாக ஏறி உள்ளே செல்ல முயன்றனர். இதையடுத்து போலீசார், கன்னட அமைப்பினரை கைது செய்து அங்கிருந்து வேனில் அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக போராட்டக்காரர்கள் கூறுகையில், பெங்களூருவில் வசிக்கும் பல்வேறு மாநில மக்கள் காவிரி நீரை பயன்படுத்துகிறார்கள். தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்கக்கூடாது என வலியுறுத்தி பெங்களூரு மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும். காவிரிக்காக விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் தான் போராடுகிறோம். மண்டியா, மைசூரு, சாமராஜநகர் மாவட்டங்களில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. ஆனால், காவிரி நீரை குடிநீராகப் பயன்படுத்தி வரும் பெங்களூரு மக்கள் எந்த விதமான பதிலும் கூறாமல் அமைதியாக உள்ளனர்.

பெங்களூருவுக்கு வழங்கப்படும் காவிரி நீரை முழுவதுமாக நிறுத்தி விவசாயிகளின் பயிர்களுக்கு வழங்க வேண்டும். தமிழகத்திற்கு தண்ணீர் கொடுத்தாலும், பெங்களூருவாசிகள் பிரச்சினையை புரிந்து கொள்ளாமல் உள்ளனர். தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டால் பெங்களூரு மக்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்றனர்.

மண்டியா டவுன் சர் எம்.விசுவேஸ்வரய்யா சிலை முன்பு மாவட்ட விவசாயிகள் நல அமைப்பினர் நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு ஆதரவாக மறைந்த நடிகர் அம்பரீஷ் மற்றும் எம்.பி. சுமலதாவின் மகனும், நடிகருமான அபிஷேக் அம்பரீஷ் போராட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், நான் அரசியல் காரணத்திற்காக இங்கு போராட வரவில்லை. சிறுவயதில் இருந்தே காவிரி பிரச்சினையை பார்த்து வளர்ந்தவன் நான். அப்பாவும், அம்மாவும் காவிரிக்காக போராடியவர்கள். டெல்லியில் காவிரி நலனுக்காக அம்மா குரல் கொடுக்கிறார். நாம் தண்ணீரை விட்டால் நமக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படும். நமக்கு நீதி கிடைக்க வேண்டும். காவிரி பிரச்சினையில் கன்னட திரையுலகம் எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாகவே இருந்துள்ளது. விரைவில் போராட்டம் நடக்கும். நம்மிடம் தண்ணீர் இருந்தால் தமிழகம் கேட்கட்டும். நமக்கே தண்ணீர் இல்லாதபோது, அவர்களுக்கு எப்படி கொடுக்க முடியும். இந்த விவகாரம் தொடர்பாக இருமாநில அரசுகளும் அமர்ந்து பேச வேண்டும். காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.

இதேபோல், மைசூருவிலும் கன்னட அமைப்பினர், விவசாய அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். மைசூரு மாவட்ட கோர்ட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மண்பானையை உடைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். ராமநகரில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து விவசாயிகள், கன்னட அமைப்பினர் மைசூரு-பெங்களூரு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் அருகே அத்திப்பள்ளியில் தமிழக எல்லையில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தமிழக அரசின் உருவபொம்மையை தீயிட்டு கொளுத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுதவிர சாம்ராஜ்நகர், சித்ரதுர்கா என பல பகுதிகளில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.


Next Story