மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது காரில் தீ பற்றி கர்ப்பிணி மனைவி - கணவன் பலி : தீ பற்றியது எப்படி? அதிர்ச்சி தகவல்
குடும்பத்தினருடன் கர்ப்பிணி மனைவியை அழைத்துக்கொண்டு கணவர் காரில் மருத்துவ பரிசோதனைக்கு சென்றுகொண்டிருந்தார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரஜித். இவரது மனைவி ரீஷா. இந்த தம்பதிக்கு ஸ்ரீ பார்வதி என்ற மகள் உள்ளார். ரீஷா மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார்.
இதனிடையே, மருத்துவ பரிசோதனைக்காக நிறைமாத கர்ப்பிணி மனைவி ரீஷாவை குடும்பத்தினருடன் கணவர் பிரஜித் கடந்த 2-ம் தேதி காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். காரை பிரஜித் ஓட்டிச்சென்ற நிலையில் முன் இருக்கையில் ரீஷா அமர்ந்திருந்துள்ளார்.
அதேவேளை, ரீஷா- பிரஜித் தம்பதியின் மகள் ஸ்ரீபார்வதி, ரீஷாவின் தந்தை விஸ்வநாதன், தாயார் ஷோபனா, உறவுக்கார பெண் சஜனா ஆகிய 4 பேரும் காரின் பின் இருக்கையில் பயணித்தனர்.
கன்னூர் அரசு மருத்துவமனை அருகே வந்தபோது நடுரோட்டில் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பிரஜித் காரை நிறுத்தியுள்ளார். உடனடியாக காரின் பின் இருக்கையில் ரீஷா- பிரஜித் தம்பதியின் மகள் ஸ்ரீபார்வதி, ரீஷாவின் தந்தை விஸ்வநாதன், தாயார் ஷோபனா, உறவுக்கார பெண் சஜனா ஆகிய 4 பேரும் காரில் இருந்து கீழே இறங்கிவிட்டனர்.
ஆனால், காரின் முன் இருக்கையில் இருந்த நிறைமாத கர்ப்பிணி ரீஷாவும், காரை ஓட்டிய அவரது கணவர் பிரஜித்தும் காரில் இருந்து கீழே இறங்க முடியவில்லை. காரின் முன் பக்க கதவுகளை திறக்க முடியாததால் காருக்குள்ளேயே சிக்கிக்கொண்ட 2 பேரும் தப்பிக்க முடியாமல் சீட்டிலேயே அமர்ந்தவாறு தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாய் தந்தை கண்முன்னே ரீஷாவும் அவரது கணவர் பிரஜித்தும் காரில் பற்றி எரிந்த தீயில் உடல் கருகி உயிரிழந்தனர். காரில் தீ வேகமாக பரவியதால் முன்னிருக்கையில் இருந்த கணவன் - மனைவியை யாராலும் காப்பாற்ற முடியவில்லை. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றபோது காரில் ஏற்பட்ட தீ விபத்தில் கர்ப்பிணி மனைவியும், கணவனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஓடும் காரில் திடீரென தீ பற்றியது எப்படி என்று விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், காரில் தீ பற்றியதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. காருக்குள் பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் வைக்கப்பட்டிருந்துள்ளது. பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டிருந்த அந்த பிளாஸ்டிக் பாட்டிலில் தீ பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தடயவியல் ஆய்வில் தெரியவந்துள்ளது.
காரில் பின்பக்க கேமரா (ரிவர்ஸ் கேமரா) பொறுத்தப்பட்டபோது டிரைவர் சீட்டில் உள்ள ஒயர்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதில் மின்கசிவு (சாட்சர்க்கியூட்) ஏற்பட்டுள்ளது என்று மோட்டார் வாகன துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது.
அந்த மின்கசிவு மற்றும் காரில் பிளாஸ்டிக் பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் ஆகியவற்றால் இந்த தீ விபத்து ஏற்பட்டு கர்ப்பிணி ரீஷாவும் அவரது கணவர் பிரஜித்தும் உயிரிழந்துள்ளதாக தடயவியல் ஆய்வில் தெரியவந்துள்ளது.
காரில் பிளாஸ்டிக் பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த பெட்ரோலில் தீப்பற்றி கர்ப்பிணி மனைவியும், கணவனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.