கரடி சங்கண்ணா எம்.பி. பா.ஜனதாவில் இருந்து விலக முடிவு
சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாததால் கரடி சங்கண்ணா பா.ஜனதாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) அவர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு:-
சட்டசபை தேர்தலில் போட்டியிட...
கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட மூத்த தலைவர்கள், சில எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில், பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கரடி சங்கண்ணா எம்.பி.யும் கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருக்கிறார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொப்பல் தொகுதியில் போட்டியிட்டு அவர் எம்.பி.யாக இருந்தார். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட தனக்கு சீட் வழங்க வேண்டும் என்று கரடி சங்கண்ணா எம்.பி. பா.ஜனதா மேலிட தலைவர்களை வலியுறுத்தி வந்தார். ஆனால் எம்.பி.யாக இருக்கும், யாருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்று பா.ஜனதா மேலிடம் கரடி சங்கண்ணாவிடம் திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது.
எம்.பி. பதவி ராஜினாமா
இதையடுத்து, தன்னுடைய மகன் கவிசித்தப்பாவுக்கு கொப்பல் தொகுதியில் போட்டியிட சீட் கொடுக்கும்படி கரடி சங்கண்ணா கேட்டு வந்தார். ஆனால் கவிசித்தப்பாவுக்கும் சீட் வழங்காமல், கொப்பல் தொகுதிக்கு பா.ஜனதா வேட்பாளரை அறிவித்துள்ளது. இதன் காரணமாக அதிருப்தி அடைந்துள்ள கரடி சங்கண்ணா நேற்று கொப்பலில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பா.ஜனதாவில் இருந்து விலகி ஜனதாதளம் (எஸ்) கட்சியில் சேர கரடி சங்கண்ணா முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
இதையடுத்து, இன்று (திங்கட்கிழமை) டெல்லிக்கு சென்று சபாநாயகர் ஓம்பிரகாஷ் பிர்லாவை சந்தித்து எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய கரடி சங்கண்ணா முடிவு செய்துள்ளார். பின்னர் ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இணைந்து வருகிற 19-ந் தேதி கொப்பல் தொகுதியில் அவர் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பது தெரியவந்துள்ளது.