கர்நாடக சட்டசபை தேர்தல்: பஜ்ரங் தளம், பாப்புலர் பிரண்ட்டை தடை செய்வோம்... காங்கிரசின் தேர்தல் அறிக்கை வெளியீடு


கர்நாடக சட்டசபை தேர்தல்: பஜ்ரங் தளம், பாப்புலர் பிரண்ட்டை தடை செய்வோம்... காங்கிரசின் தேர்தல் அறிக்கை வெளியீடு
x

கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தளம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆகியவற்றை தடை செய்வோம் என தெரிவித்து உள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பணியாற்றி வருகின்றன.

கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசாரம், பேரணி, கட்சி பொது கூட்டம் போன்றவற்றிலும் கலந்து கொண்டு வருகின்றன. கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் நட்சத்திர பிரசாரகர்களும் கலந்து கொண்டு மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ள தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தளம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆகியவற்றை தடை செய்வோம் என தெரிவித்து உள்ளது.

அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டு உள்ள அந்த அறிக்கையில், சட்டம் மற்றும் அரசியல் சாசனம் புனிதம் வாய்ந்தது என நாங்கள் நம்புகிறோம். அதனை தனி நபர்கள் அல்லது பஜ்ரங் தளம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் பிற அமைப்புகள், பெரும்பான்மையினர் அல்லது சிறுபான்மையினர் இடையே பகைமையையோ அல்லது வெறுப்புணர்வையோ ஊக்குவித்து மீறுதல் கூடாது.

சாதி மற்றும் மத ரீதியாக சமூகத்திற்கு எதிராக வெறுப்புணர்வை பரப்ப கூடிய தனி நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது காங்கிரஸ் கட்சியானது உறுதியான மற்றும் தீர்க்கம் வாய்ந்த முடிவை எடுக்கும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

அதுபோன்ற எந்தவொரு அமைப்பின் மீதும் சட்டத்தின்படி, தடை விதிப்பது உள்ளிட்ட முடிவுகளை நாங்கள் எடுப்போம் என்றும் தெரிவித்து உள்ளது.


Next Story