கர்நாடகாவில் நிறமூட்டப்பட்ட பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு தடை


கர்நாடகாவில் நிறமூட்டப்பட்ட பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு தடை
x
தினத்தந்தி 11 March 2024 10:52 AM GMT (Updated: 11 March 2024 12:29 PM GMT)

பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியனில் தடைசெய்யப்பட்ட ரோடமைன்-பி எனப்படும் செயற்கை நிறமூட்டி கலக்கப்படுவதை கர்நாடகா சுகாதாரத்துறை கண்டுபிடித்துள்ளனர்.

பெங்களூரு,

புதுச்சேரி மற்றும் தமிழக அரசு மேற்கொண்ட ஆய்வின் முடிவில் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் ரோடமைன்-பி என்ற வேதிப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது கர்நாடகாவிலும் மக்களின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் ரோடமைன்-பி ரசாயனம் கலந்த கோபி மஞ்சூரியன், பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு கர்நாடகா சுகாதாரத்துறை இன்று தடை விதித்துள்ளது. கர்நாடக சுகாதார மந்திரி தினேஷ் குண்டுராவ் இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டார்.

பலரும் விரும்பி உண்ணும் கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சு மிட்டாய்களில் ரோடமைன்-பி என்ற செயற்கை நிறமூட்டியைப் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்த மந்திரி தினேஷ், மீறினால் உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "ரோடமைன்-பி போன்ற செயற்கை நிறமூட்டிகளால் தென் மாநிலங்களில் பரவலாக பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்புக்கு மக்கள் உள்ளாவது கண்டறியப்பட்டுள்ளது. இதனையொட்டி கர்நாடகா முழுவதும் 171 கோபி மஞ்சூரியன் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தியதில் 64 மாதிரிகள் பாதுகாப்பானவையாக இருந்தன. எஞ்சிய 107 மாதிரிகளில் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அதேபோல் சேகரிக்கப்பட்ட 25 பஞ்சுமிட்டாய் மாதிரிகளில் 15 பாதுகாப்பற்றவையாக இருந்தன.

இந்த பாதுகாப்பற்ற மாதிரிகளில் டார்ட்ராசைன், கார்மோஸைன், சன்செட் யெல்லோ, ரோடமைன்-பி போன்ற செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மாதிரிகளை பெரிய உணவகங்கள் தொடங்கி சாலையோர கடைகள் வரை பல இடங்களில் இருந்து சேகரித்தோம். இவற்றில் சில மாதிரிகள் கர்நாடகாவின் 3 முக்கிய நட்சத்திர உணவகங்களில் இருந்து பெறப்பட்டவை. அனைத்திலும் ஆபத்தான ரோடமைன்-பி பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரோடமைன்-பி உபயோகிக்கும் உணவுகள் அடர் சிவப்பில் காட்சியளிக்கும். இதற்காகவே இந்த நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை உடலுக்கு கடும் தீங்கு விளைவிக்கக் கூடியவை. இதனால் ரோடமைன்-பி செயற்கை நிறமூட்டி பயன்பாடு தடை செய்யப்படுகிறது. மாநில உணவு பாதுகாப்பு ஆணையர், ரோடமைன்-பி பயன்பாட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். கோபி மஞ்சூரியன், பஞ்சுமிட்டாய்களில் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்த தடை அமலுக்கு வருகிறது" என்றார்.


Next Story